சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு இம்மாதம் 23ம் தேதி நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி கேட்கப்பட்டது.
காவல்துறையின் அனுமதி வழங்கப்பட்டும், மாநாடு நடத்துவதற்கான கால அவகாசம் இல்லாததாலும், மாநாட்டிற்கான பணிகள் முழுதாக நிறைவடையாத காரணித்தினாலும், அந்த தேதி கைவிடப்பட்டு, அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் மாநாடு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி திருமாலிடம் மீண்டும் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தார்.
மேலும், மாநாட்டில் 50 ஆயிரத்து 500 பேர் வரை கலந்து கொள்வதாக கூறப்படும் நிலையில், மாநாடானது மாலை 4 மணி முதல் நடைபெறும் எனவும் விஜய் 6 மணியளவில் கட்சியின் கொள்கை மற்றும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவரின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதையும் படிங்க: பரிதாபமான 'பரிதாபங்கள்' குழு... லட்டு பாவங்கள் போட்டு பகிரங்க மன்னிப்பு.. என்னதான் நடந்தது?
இந்நிலையில், விக்கிரவாண்டி வி.சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் செய்யும் பணிகளில் கட்சியினர் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். முதல் கட்ட ஆயத்த பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், த.வெ.க மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்புக்கோரி மனு அளித்து 4 நாட்களாகியும், இதுவரை விழுப்புரம் மாவட்ட காவல்துறை தரப்பில் எந்த ஒரு பதிலும் அளிக்கப்படவில்லை.
ஏனென்றால், மாநாடு நடைபெறுவதாக அறிவித்த அக்டோபர் 27ஆம் தேதி அடுத்த மூன்று நாட்களில், அக்டோபர் 30 இல் தேவர் ஜெயந்தி விழா ராமநாதபுரத்தில் நடைபெற உள்ளது. எனவே அதற்கு 3 நாட்கள் முன்னதாக ஏராளமான காவல்துறையினர் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதனால், விஜய் மாநாட்டிற்கு பாதுகாப்பு பணி மேற்கொள்வதில் காவல்துறை தரப்பில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த விவகாரம் விரைவில் சீர் செய்யப்பட்டு காவல்துறை அனுமதி அளித்தால் மட்டுமே குறிப்பிட்ட தேதியில் மாநாடு நடைபெறும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இப்படியான சூழலில் நாளை (செப்.26) த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் தவெக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநாடு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்