கோயம்புத்தூர்: நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் என தொடர்ச்சியாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆம் தேதியாகும். மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்பு மனுவை தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், கோவையில் இன்று அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். அதிமுக சார்பில் கோவையில் போட்டியிடும் சிங்கை ராமசந்திரன், அண்ணா சிலை அருகே உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகமான, இதய தெய்வம் மாளிகையில் இருந்து ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், கோவை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் கலாமணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, காளப்பட்டியில் இருந்து வாகன பேரணி சென்றுள்ளார். இதில், நாம் தமிழர் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்டவர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்துள்ளனர்.
நாதக வாகன பேரணி காளப்பட்டி நால் ரோட்டில் சென்ற நிலையில், அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அனுமதியின்றி வாகன பேரணியாக செல்லக்கூடாது என்று போலீசார் கூறியதால் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தியுள்ளனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிது நேர வாக்கு வாதத்திற்கு பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வாகனங்கள் புறப்பட்ட நிலையில், மீண்டும் நேரு நகர் பகுதியில் போலீசாரால் நாதக வேட்பாளர் கலாமணி வாகனம் மற்றும் உடன் வந்தவர்களின் இருசக்கர வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால், போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், ஒவ்வொரு வாகனங்களாக அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து கோவை நாதக வேட்பாளர் கலாமணி கூறுகையில்,” வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக செல்லும் நிலையில் போலீசார் தொடர்ந்து எங்களுக்கு இடையூறு அளித்து வருகின்றனர். இவர்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் நடந்தே வேண்டுமானாலும் செல்கிறோம். மற்ற கட்சிகள் செல்லும்பொழுது ஏன் தடுக்க மாற்றீர்கள். அண்ணமலை மற்றும் பிரதமர் மோடி இங்கே வந்த பொழுது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தீர்கள். நேர்மையாக செல்லும் எங்களுக்கு தொடர்ந்து இடையூறு அளிக்கிறீர்கள்” என்று குற்றம் சாட்டினார்.