திருநெல்வேலி: நெல்லை பழைய பேட்டை தென்காசி சாலையில் ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரி இயங்கி வருகிறது. நெல்லை மாவட்டத்தின் முதல் அரசு கல்லூரியான இங்கு சுமார் 4,500 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி வளாகத்தின் பின் பகுதியில் கடைசியாக உள்ள கட்டிடத்தில் இளங்கலை வணிகவியல் பிரிவு செயல்பட்டு வருகிறது.
இதில் இரண்டாம் ஆண்டு வகுப்பறை முழுவதும் ரத்த துளிகள், ரத்தக் கறைகள் இருந்துள்ளது. இதனை கல்லூரி பாதுகாப்பு பணியில் இருந்த இரவு காவலாளி பார்த்து, கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு வந்த மாணவிகளும் முதல்வரிடம் இதே புகாரை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் கல்லூரி வகுப்பறையில் ஆய்வு மேற்கொண்டனர். கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறை முழுவதும் இருந்த ரத்தக் கறைகளின் மாதிரிகள் சேமிக்கப்பட்டு தடய அறிவியல் பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்ததுடன், சம்பவம் தொடர்பாக ஆய்வும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கல்லூரி வளாகத்தில் கட்டுமானப் பணி நடந்து வரும் நிலையில், அப்பணியில் உள்ள தொழிலாளர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடம் கைரேகை உள்ளிட்ட அடையாளங்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ரத்தக் கறைகள் மனிதர்களுடையதா அல்லது விலங்குகளுடையதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கல்லூரியில் ரத்தக் கறை கிடப்பதாக கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் தடய அறிவியல் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரத்த பரிசோதனை முடிவுக்குப் பிறகு இதன் பின்னணி குறித்து தெரிய வரும்” என்றனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் கோவில் திருவிழாவில் மோதல்.. இளைஞர் குத்திக் கொலை.. இருவர் கைது!