கடலூர்: கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிகுப்பம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் பேரன் ஆகிய 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. போலீஸ் விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கமலேஸ்வரி (65) - சுரேஷ்குமார்(70) தம்பதி. இந்த தம்பதி பல ஆண்டுகளாக நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்தனர்.
சுரேஷ் குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சுரேஷ்குமார் மறைவுக்குப் பிறகு கமலேஸ்வரி அவரது மகன் சுதன் குமார் (40) மற்றும் பேரன் (சுதன் குமாரின் மகன்) நிஷாந்த் (10) ஆகியோர் வசித்து வந்தனர். சுதன் குமார் திருமணம் ஆகி சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்றுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணி செய்து வந்த சுதன் குமார் 15 நாட்கள் அலுவலகத்திலும், 15 நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்து வந்துள்ளார். இந்த நிலையில்தான், நேற்று நெல்லிக்குப்பதில் உள்ள வீட்டில் சுதன் குமார், தாய் கமலேஸ்வரி மற்றும் மகன் நிஷாந்த் மூவரும் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், இது கொலையாக இருக்கலாம் என்று கருதினர்.
இந்த நிலையில், சுதன் குமார் விவாகரத்துக்குப் பிறகு அஞ்சுதம் சுல்தானா என்பவருடன் 'லிவிங் டு கெதர்' உறவு முறையில் இருந்து வந்தது தெரிய வந்தது. அஞ்சுதம் சுல்தானா வெளிநாடு சென்றிருந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்புதான் பெங்களூரு வந்துள்ளார். பெங்களூரில் இருந்து அஞ்சுதம் சுல்தானாவை நேரில் விசாரணைக்கு அழைத்த நிலையில், இன்று டிஎஸ்பி பழனி தலைமையில் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது.
மேலும், கொலை செய்யப்பட்ட சிறுவன் நிஷாந்த் சுதன் குமாருக்கும், அஞ்சுதம் சுல்தானாக்கும் பிறந்த குழந்தை என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இன்று காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வெளியே வந்த அவரிடம் சுதன் குமார் பற்றி கேட்டபோது, ''அவர் நல்ல மனிதர் என்றும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அவருடைய தந்தை இறந்த போது தான் தொலைபேசியில் பேசியதாகவும், எப்பொழுதாவது அவருடைய தந்தை வீடியோ கால் மூலம் பேசும்போது குழந்தையை எனக்கு காண்பிப்பார் என்றும் தெரிவித்தார்.
பின்னர், அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடல்களைப் பார்ப்பதாக கூறிவிட்டுச் சென்றார். தொடர்ந்து இந்த கொலை சம்பந்தமாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 30 வயது பெண் 15 வயது சிறுவனுடன் காதல்.. கிளாம்பாக்கத்தில் முடிந்துபோன பயணம்.. 'அக்கான்னு கூப்பிட்டானே'!