சென்னை: தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதல் விலையை தனியார் நிறுவனங்கள் பெருமளவில் குறைத்துள்ளன. பால் விலைக் குறைப்பு மட்டுமின்றி, பாலின் தரத்தையும் குறைத்துக் காட்டி குறைந்த விலைக்கு வாங்கி உழவர்களை ஏமாற்றுகின்றன. உழவர்களை சுரண்டும் தனியார் பால் நிறுவனங்களின் மோசடிகளை அரசு கண்டு கொள்ளாதது மட்டுமின்றி, அந்த நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 2.05 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், மிகக்குறைந்த அளவு, அதாவது 30 லட்சம் லிட்டர் பாலை மட்டும் தான் தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள 1.75 கோடி லிட்டர் பாலை தனியார் நிறுவனங்கள் தான் கொள்முதல் செய்கின்றன.
ஆவின் நிறுவனம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே பால் கொள்முதல் அளவை அதிகரிக்கவில்லை. அதனால், உழவர்கள் தங்களின் பாலை விற்பனை செய்வதற்கு தனியார் பால் நிறுவனங்களையே நம்பிக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் பால் நிறுவனங்கள் எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு உழவர்களை சுரண்டி வருகின்றன.
தமிழ்நாட்டில் ஆவின் பால் நிறுவனம் ஒரு லிட்டர் பசும்பாலை ரூ.38க்கும், எருமைப்பாலை ரூ.47க்கும் கொள்முதல் செய்கிறது. பெரும்பான்மையான தனியார் நிறுவனங்களும் கிட்டத்தட்ட இதே விலைக்கு பாலை கொள்முதல் செய்து வந்தன. ஆனால், கடந்த சில வாரங்களாக தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையை கணிசமாக குறைத்துவிட்டன.
தனியார் நிறுவனங்களின் சுரண்டலைத் தடுக்க பால் விற்பனை ஒழுங்குமுறை
— Dr S RAMADOSS (@drramadoss) June 30, 2024
ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்!@CMOTamilnadu pic.twitter.com/IH8RtUzNMP
இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பசும்பாலை அதிகபட்சமாக ரூ.29க்கு மட்டும் தான் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. இது ஆவின் நிறுவனம் வழங்கும் கொள்முதல் விலையை விட லிட்டருக்கு ரூ.10 குறைவு. அதுமட்டுமின்றி, பால் கொள்முதல் செய்யப்படும் அளவையும் தனியார் பால் நிறுவனங்கள் வெகுவாக குறைத்துவிட்டன.
தலைதூக்கும் தனியார் நிறுவனங்களின் மோசடி: தனியார் நிறுவனங்கள் பாலுக்கான கொள்முதல் விலையை குறைத்து விட்டதால், உழவர்களுக்கு தினமும் ரூ.100 முதல் ரூ.500 வரை இழப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, பால் கொள்முதல் அளவு குறைந்துவிட்டதால், பல உழவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பாலை விற்பனை செய்ய முடியாமல் பெரும் இழப்புக்கு ஆளாகின்றனர்.
இன்னொருபுறம் பாலின் தரத்தை ஆய்வு செய்யும் எந்திரங்களில் சில மோசடிகளை செய்து, பாலின் தரத்தை குறைத்து காட்டுவதன் மூலம் ஒரு லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை குறைத்து வழங்குகின்றன. இப்படியாக ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை தனியார் நிறுவனங்கள் மோசடி செய்கின்றன. இதனால் உழவர்களுக்கு ஏற்படும் இழப்பு மிக அதிகம்.
தனியார் நிறுவனங்களின் இந்த மோசடியை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. பாலின் தரத்தை ஆய்வு செய்வதற்காக தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தும் கருவியை ஆய்வு செய்து, அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை சரி செய்ய வேண்டியது அரசின் முதன்மை பொறுப்பாகும். ஆனால், இந்த கடமையை தமிழக அரசு செய்வதே இல்லை.
ஆணையம் தேவை: தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பேருருவம் எடுத்துள்ளன. இது அரசின் தோல்வியையே காட்டுகிறது. இந்த நிலையை மாற்றி, தனியார் பால் நிறுவனங்களின் சுரண்டலைத் தடுக்கவும், உழவர்கள் மற்றும் பொதுமக்களின் உரிமைகளைக் காக்கவும் வசதியாக தமிழ்நாட்டில் பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும். அந்த ஆணையம் நிர்ணயிக்கும் கொள்முதல் விலைக்கு உழவர்களிடம் பால் கொள்முதல் செய்யப்படுவதும், விற்பனை விலைக்கு பொதுமக்களுக்கு சந்தையில் பால் விற்பனை செய்யப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும்.