விழுப்புரம்: அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், அம்பேத்கரின் பிறந்த நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், பாமக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார் அதன் பின்னர், சமூக நீதிக்கு எதிரான பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் பிரசாரத்தில் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு அவர், 'தேர்தல் நேரத்தில் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வது வாடிக்கையான ஒன்று' என்றும் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய கால அவகாசம் முடிந்த நிலையில், பாமகவின் நிலைப்பாடு என்ன? என செய்தியாளர்கள் எழுப்பிய மற்றொரு கேள்விக்கு, 'தேர்தல் முடியட்டும்' எனப் பதிலளித்துள்ளார்.
முன்னதாக, வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரிந்துரை அளிக்க கால அவகாசம் நிறைவடைந்து ஓராண்டுக்கும் மேலான நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர் சமூகத்தினருக்கான 10.50 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அளிக்க, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது.
இட ஒதுக்கீட்டை வழங்க கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையிலும் கூட தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீட்டை வழங்காதது கண்டிக்கத்தக்கது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு விரும்பவில்லை. சமூகநீதி வேடம் போடும் திமுகவின் உண்மை முகம் சமூக அநீதி தான் என்பதற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. போராடித்தான் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்றால், அதற்கும் பாமக தயாராகத்தான் இருக்கிறது. உடனடியாக இட ஒதுக்கீட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இறுதிகட்ட தேர்தல் பரப்புரையில் தலைவர்கள்.. இன்று மாலை நெல்லை வரும் பிரதமர் மோடி!