திருவண்ணாமலை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவைத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ், களம்பூர் மற்றும் வந்தவாசி ஆகிய இடங்களில் நேற்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பிரச்சாரத்தில் பேசிய அவர்," தமிழகத்தில் விவசாய நிலங்களில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணேஷ்குமார் போராடினார். தனது அறிக்கைக்குப் பிறகு, குண்டர் சட்டத்தில் கைது செய்த விவசாயிகளை விடுவித்தனர்.
சிப்காட் தொழிற்சாலை வேண்டும், வேலைவாய்ப்புகள் பெருக வேண்டும். ஆனால், விவசாயிகளின் விளை நிலங்களைப் பறித்து சிப்காட் தொழிற்சாலை அமைப்பது நல்ல அரசுக்கு அழகு இல்லை. இதற்காக 360 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். விளைநிலங்களில் சிப்காட் அமைப்பதை எதிர்த்துப் போராடிய விவசாயிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்த திமுக அரசின் மூன்றாண்டுக் கால ஆட்சியை மக்கள் கணிக்கும் தேர்தலாக இந்த மக்களவை தேர்தல் அமையும்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆட்சியிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சி, நந்திகிராமம் மற்றும் சிங்கூரில் உள்ள விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியது. இதனை எதிர்த்து மம்தா பானர்ஜி போராடியதால், 36 ஆண்டுக் காலம் ஆட்சியிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சி அகற்றப்பட்டது. அதேபோன்று, தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர இந்த தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும்” என்றார்.