திருச்சி: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி அயோத்தி செல்வதற்கு முன் இன்று (ஜன. 20) ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதற்காக, சென்னையில் இருந்து காலை 10 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து, 10:30 மணிக்கு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை திடலுக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அங்கிருந்து, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றார். கோயிலில் பிரதமருக்கு, தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், ஹரிஸ் பட்டர் ஆகியோர் பூரண கும்பம் மரியாதை வழங்கி வரவேற்றனர்.
கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி, தாயார், ரங்கநாதர் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். உற்சவர் நம்பெருமாளை வணங்கி, துளசி தீர்த்தம் பருகிய பிரதமருக்கு, ‘சடாரி’யை தலை மற்றும் புஜங்களில் வைத்து ஆசி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, மற்ற சன்னதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்த பின், கோயிலில் நடந்த கம்பராமாயணம் பராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பின், நன்பகல் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து புறப்பட்ட பிரதமர், ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக, கோயில் வளாகம் மட்டுமின்றி, கோயிலை சுற்றி உள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. திருச்சியில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது தவிர, நேற்று மாலை 6 மணி முதல் இன்று பிற்பகல் 2.30 மணி வரை, ஸ்ரீரங்கம் ரெங்கம் ரெங்கநாதர் கோயிலில், பொது தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்திற்கு சென்றார். இதனிடையே பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, "பாரத பிரதமர் மோடி தமிழகத்தில் இரண்டாம் நாள் சுற்றுப்பயணமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்துள்ளார்.
சுவாமி தரிசனம் செய்த பிரதமர், கம்பராமாயணம் அரங்கேற்ற மண்டபத்தில் அமர்ந்து, பாராயணம் கேட்டார். இங்கிருந்து ராமேஸ்வரம் செல்லும் பிரதமருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு அரங்கப் பெருமான் அருள் எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதற்கேற்ப இன்றைய தரிசனமும் அமைந்திருந்தது" என்றார்.
இதையும் படிங்க: தொடர்ந்து தமிழகத்தைப் புகழும் பிரதமர் மோடி.. தமிழகத்தில் வாக்கு வங்கி உயருமா?