தூத்துக்குடி: ஆசிரியர் பணி என்பது கல்வியை மட்டும் போதிப்பது அல்ல. மாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பு, பொது அறிவு என அனைத்தையும் எடுத்துக்கூறி அவர்களை சிறந்த மனிதர்களாக மாற்றும் உன்னத பணியாகும். ஒரு நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் கைகளில் உள்ளது என்ற ஒரு பொதுவான கருத்து உள்ளது.
அதனடிப்படையில், மாணவர்களின் எதிர்காலத்திற்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார் புதுக்குடியைச் சேர்ந்த ஆசிரியர் சக்திவேல். இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராகவும், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.
இவர் ஆசிரியராக பணிபுரிந்து வரும் மேல்நிலைப்பள்ளியானது பாறைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ளதால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளியின் பசுமைப்படை அமைப்போடு இணைந்து பாறை மிகுந்த பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு அதனை முறையாக பராமரித்து வளர்த்தும் வருகிறார்.
மேலும், 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தான் நடத்தும் உடற்பயிற்சி கூடத்தில் இலவசமாக உடற்கல்வி பயிற்சி வழங்கியும், மாணவர்களுக்கு எண்ணற்ற உதவிகளையும் செய்து வருகிறார். இதுகுறித்து, 11ம் வகுப்பு பயிலும் மாணவர் அரச முத்து, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "ஆசிரியர் சக்தி வேல் மாணவர்களுக்கு நல்ல உதவியாளர். நான் இப்பள்ளியில், சேர்ந்ததும் என்னை நன்றாக கண்காணித்து பாதுகாத்துக் கொண்டார்.
ஒவ்வொரு நாளும் பல விஷயங்கள், அறிவுரைகளை கூறி வருவார். 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச உடற்பயிற்சி சொல்லி கொடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி ஆறாம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு பத்து நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கி வருகிறார். மேலும், அவருக்கு பரிசாக வந்த ரூ.1 லட்ச காசோலையை பள்ளியின் வளர்ச்சிக்காக வழங்கி உள்ளார்."
மாணவர் சண்முக சுந்தர் கூறும் போது, "ஆசிரியர் சக்தி வேல் மரம் எவ்வாறு வளர்ப்பது, பராமரிப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து தினமும் எங்களுக்கு கூறி வருவார். இப்பகுதியில் வாழை வளர்ப்பு அதிகம், ஆகவே, வாழை எப்படி வளர்ப்பது, ஒரு வருடத்தில் காய் கொடுக்கும் வாழையை ஆறு மாதத்தில் காய் கொடுக்க வைப்பது எப்படி என்று கூறுவார்.
இயற்கை உரம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து கூறி வருவார். 6ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இடையில் நின்றுவிடக்கூடாது என்பதற்காக பத்து மரக்கன்றுகள், நாட்டு கோழிக்குஞ்சுகள் கொடுக்கின்றார்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "வலுத்த கோரிக்கை பழுக்கும் நேரம்" முரண்படுகிறாரா துரைமுருகன்? - deputy chief minister issue
ஆசிரியர் சக்திவேல் கூறும்போது, "அரசுப் பள்ளியில் சேர்க்கையை கூட்டுவதற்காக பல உதவிகளை செய்து வருகின்றேன். அரசுப் பள்ளி என்றால் இப்படித்தான் இருக்கும் என்று பெற்றோர்கள் நினைக்கின்றார்கள். ஆனால் மெட்ரிகுலேஷன் பள்ளியை விட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு திறமை அதிகம். இது பெற்றோர்களுக்கு தெரியவில்லை.
என் பிள்ளை மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கின்றான், வேனில் ஷூ மாட்டிக் கொண்டு போகின்றான் என்ற மோகம் பெற்றோர்களுக்கு உள்ளது. அரசுப் பள்ளியில் என்ன இருக்கிறது என்று பெற்றோர்களுக்கு தெரியவில்லை. அதனை பெற்றோருக்கு தெரிய வைத்து வருகின்றோம்.
மேலும், ஆறாம் வகுப்பு சேரும் பள்ளி மாணவர்களுக்கு எனது சொந்த செலவில் 10 நாட்டுக்கோழி குஞ்சு, பத்து மரக்கன்றுகள் கொடுத்து வருகிறேன். காரணம், மாணவர்கள் இன்று 100 சதுர அடியில் அந்த மரக்கன்றுகளை வைக்கும் போது, உதாரணமாக, குமுளி, தேக்கு வைத்தால் பத்து வருடத்தில் ஒரு மரம் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு விற்கலாம். கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் ஆகும். இந்த 15 லட்சம் கிடைத்தால் வேலைக்கும் சரி, திருமணத்திற்கும் சரி யாரையும் நம்பி இருக்க வேண்டாம்.
பள்ளியில் பயில்கின்ற 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சொந்த செலவில் இலவச உடற்பயிற்சி மையம் நடத்தி வருகின்றேன். எத்தனை மாணவர்கள் வந்தாலும் அவர்களுக்கு உடற்பயிற்சி கற்று கொடுத்து வருகின்றேன். உடற்பயிற்சி மேற்கொள்ளும் பட்சத்தில் எந்த தீங்கிற்கும், கெட்ட வழிக்கும் போக மாட்டார்கள்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு தினமும் வகுப்பு துவங்கும் முன் 10 நிமிடம் இயற்கை விவசாயத்தைப் பற்றி கூறுவேன். மொபைல் இல்லாமல் எந்த பசங்களும் கிடையாது. மொபைல் பார்க்காத அளவிற்கு, இயற்கை விவசாயம் எவ்வாறு பண்ண வேண்டும், என்ன பயன் கிடைக்கிறது என்று மோட்டிவேஷனாக கூறுவேன்" என்றார்.