திருப்பத்தூர்: திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் 73ஆம் ஆண்டு விழா அக்கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் மரிய அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்ற ஆண்டு விழாவில், தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
விழாவில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றிய பீட்டர் அல்போன்ஸ், அக்கல்லூரியில் பல்வேறு நிலைகளில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்தித்த பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது, "அண்ணாமலை பேசுவதைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
அவர் சுதந்திரப் போராட்ட தியாகி போல் பேசி வருகிறார். பல்லாண்டு காலம் நாட்டை ஆட்சி செய்தவர் போலவும், அவருக்கு தெரியாத செய்தி ஒன்றுமே இல்லை என்பது போலும் பேசி வருகிறார். பாராளுமன்றத்தில் மோடி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, "இவரைப் போல் பிரதமர் கிடையாது" என வாழ்த்தி பாராட்டுகிறார்.
அது மட்டுமின்றி, "அவர் காட்டிய வழியில் தான் பயணிக்கின்றேன். அவர் பலருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார்" என்று பாராட்டி பேசுகிறார். ஆனால் தற்போது மன்மோகன் சிங் ஆட்சியில் நடைபெற்றது அனைத்தும் தவறு, ஊழல் ஆட்சி என்று அறிக்கை வருகிறது. எனவே பாஜக இரட்டை நாக்கோடு பேசி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் எவ்வளவு சுற்றினாலும் தமிழ்நாட்டில் காங்கிரசினர் வளர்த்து வைத்துள்ள சமூக நீதிப் பயிர் மற்றும் மத நல்லிணக்க அரசியலை அண்ணாமலை மட்டுமல்ல அவருடைய தாத்தாவே வந்தாலும் அழிக்க முடியாது" என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலர் முனைவர் பிரவீன் பீட்டர், கல்லூரியின் மேலாளர் அண்டனிராஜ், கல்லூரியின் பொறுப்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கை.. ராமேஸ்வரத்தில் திமுக போராட்டம்!