சென்னை: கண்ணகி நகரைச் சேர்ந்த முத்து(39) என்பவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பெருங்குடி, காமராஜ் நகர் 3வது குறுக்கு தெருவில் தங்கிக் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். உடன் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 6 பேர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இதில் முத்து(39), கோயம்புத்தூரை சேர்ந்த சந்துரு(22), திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா(45), மூவரும் ஒரு மாதமாக வேலை பார்க்கின்றனர். இந்நிலையில் சந்துரு, ராஜா ஆகிய இருவரையும் முத்து, நான் தான் பெரிய ரௌடி, என்னை மீறி எதுவும் செய்யக்கூடாது எனக் கத்தியை காட்டி தொடர்ந்து மிரட்டி அடித்து வந்துள்ளார். கடந்த 24ஆம் தேதி முத்துவும், சந்துருவும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மதுபோதையில் சந்துரு, முத்துவிடம் இருந்த கத்தியை எடுத்து அவரது முகத்தில் வெட்டியுள்ளார். பின்னர் ராஜாவிடம் கத்தியை கொடுத்த போது, அவரும் அதே கத்தியில் வெட்டி முத்துவை கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து முத்துவின் உடலை அருகிலேயே குழி தோண்டி புதைத்துள்ளனர். இதனையடுத்து ராஜா மற்றும் சந்துரு இருவரும் கோயம்புத்தூர் தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் இந்த தகவல் கட்டிட பொறியாளர் மூலம் காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. அந்த தகவலின் பேரில் சந்துருவின் செல்போன் சிக்னலை வைத்து துரைபாக்கம் உதவி ஆய்வாளர் ரஞ்சித் தலைமையில் போலீசார் புஷ்பராஜ், மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கோயம்புத்தூர் சென்று இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதனைதொடர்ந்து உடலை புதைத்த இடத்திற்கு அழைத்து வந்து புதைத்த இடத்தை காட்டி உறுதி செய்தனர். பின்னர் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சிவகுமார் தலைமையில் நேற்று பள்ளம் தோண்டி முத்துவின் உடலை எடுத்து, உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார், கொலை செய்த இருவரிடமும் தொடர்ந்து விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் பணப்பட்டுவாடா புகார்: சென்னையில் ஐந்து இடங்களில் வருமான வரித்துறை சோதனை! - Income Tax Raid At Chennai