விருதுநகர்: கோடை விடுமுறை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதில் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் கேரள மாநில மக்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயிலானது (06035), மே 16-ம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமையும் தாம்பரத்திலிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.40 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதனை அடுத்து, நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் (வண்டி எண்: 06035), இன்று காலை 06.50 மணிக்கு ராஜபாளையம் வந்து சேர்ந்தது.
தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயிலின் முதல் சேவையை வரவேற்கும் விதமாக, ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம் சார்பில் ரயிலுக்கு மாலை அணிவித்து, ரயில் ஓட்டுநர்கள், பணியாளர்கள் மற்றும் நிலைய கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மேலும், இவ்வண்டியில் பயணித்து ராஜபாளையம் வந்தடைந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இது தொடர்பாக இச்சங்கத்தின் தலைவர் 'சுகந்தம்' ராமகிருஷ்ணன் கூறியதாவது, “கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்குப் பின் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தோடு ராஜபாளையம் ரயில் வழித்தடம் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இது இப்பகுதி மக்கள், வியாபாரிகளுக்கு பெரும் பயனளிக்கும். மேலும் இந்த ரயிலில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ஸ்லீப்பர் மற்றும் முன்பதிவில்லா பெட்டிகளை இணைத்து இயக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
ராஜபாளையம் வழியாக கேரளத் தலைநகருக்கு ஒரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்ற எமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயிலை இயக்கிய ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறினார். இந்தச் சிறப்பு ரயிலில் ராஜபாளையத்தில் 127 பேரும், தென்காசியில் 197 பேரும், மதுரையில் 323 பேரும் பயணம் மேற்கொண்டனர். இச்சிறப்பு ரயிலின் முதல் சேவை 101% பயன்பாட்டுடன் முழுவதும் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தென்னிந்திய மாநிலங்களில் கூடுதலாக 58 சதவீதம் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்! - Summer Rain Report In TN