மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இருந்து கல்லணை செல்லும் பிரதான சாலையில், மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவிழந்தூர் ஊராட்சி பொட்டவெளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்திற்கான பயணிகள் நிழற்குடை ஒன்று ஒருபக்க பக்கவாட்டு சுவர் இடிந்து மிக மோசமான நிலையில் உள்ளது.
இந்நிலையில், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஆபத்தை உணராமல் இந்த பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாழடைந்த பயணிகள் நிழற்குடையை சரிசெய்து கொடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
மேலும், மழைக்காலம் துவங்கவுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக இந்த பாழடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைத்து கொடுக்குமாறு ஊர் மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரளாவில் ரயில் விபத்து..! தமிழக தொழிலாளர்கள் 4 பேர் மரணம்
இது குறித்து பொட்டவெளி கிராமத்தைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் கூறுகையில், "திருவிழந்தூர் ஊராட்சி பொட்டவெளி கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இடிந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரக்கூடிய காலம் மழைக்காலம் என்பதால் இந்த பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையை சரி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், தமிழக அரசு அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் உள்ள பயணிகள் நிழற்குடையை சரிசெய்து வரும் நிலையில், இந்த பாழடைந்த பயணிகள் நிழற்குடையையும் சரிசெய்ய வேண்டும் என கிராம மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது வரையில் இந்த பயணிகள் நிழற்குடை மூலம் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. எனவே, மக்களின் பாதுகாப்பு கருதி, அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க உடனடியாக பயணிகள் நிழற்குடையை மாவட்ட நிர்வாகம் சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிகை விடுத்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்