சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் முதன்முறையாக 3 ஆண்டுகளுக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த கார் பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தி.நகர் அருகே நடைபெற இருந்தது.
அந்த நேரத்தில், மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த காரணத்தால், இந்த கார் பந்தயத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் தற்போது மீண்டும் கார் பந்தயத்தை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையில் மழை தீவிரம் அடையும் முன்பாகவே வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்த கார் பந்தயம் அண்ணா சாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, இன்று இறுதிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, அரசு அதிகாரிகள் ஆகியோர கலந்து கொண்டனர். கார் பந்தயம் நடைபெற இன்னும் 7 நாட்களே இருப்பதால், பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக கூட்டம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நடைபெற்ற ஆலோசனை முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையின் மையப் பகுதியான தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தொலைவிற்கு நடத்தப்படும். இந்த ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கார் பந்தயம் இரவு நேரத்தில் நடைபெற இருப்பதால், மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் போட்டியை நேரில் பார்ப்பதால் பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஃபார்முலா 4 கார்
பந்தயத்தை 8 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கார் பந்தயம் வருகிற சனிக்கிழமை தொடங்க உள்ள நிலையில், காலை பொதுமக்கள் இலவசமாக பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .
அதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை மதியத்திற்கு மேல் தகுதிச் சுற்று போட்டிகள் நடக்கும். அதற்கு அடுத்தபடியாக இரவு 10.30 மணி வரை கார் பந்தயத்தின் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெறும். இந்த போட்டியால் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாது” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மீண்டும் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்.. ரேஸ் பிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!