புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகாமையில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் புதுநகரைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர் தங்களது வேண்டுதலை நிறைவேற்றக் கிடா வெட்டி பூஜை நடத்தி உள்ளனர். அப்போது கிடா வெட்டு பூஜையில் கலந்து கொள்ளக் கிராமத்தில் உள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களையும் பூஜை நடத்திய சமூகத்தினர் அழைத்துள்ளனர்.
இந்நிலையில் மட்டங்கால் பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அந்த பகுதிக்கு வந்த இரண்டு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களுக்கு முன்னதாகவே பட்டியலின இளைஞர்கள் உணவு உண்ண அமர்ந்து விட்டதாகக் கூறி பட்டியலின இளைஞர்களை அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்தின் பெயரைச் சொல்லித் தாக்கி உள்ளனர்.
இதனால், பட்டியலின இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கறம்பக்குடி - பட்டுக்கோட்டை சாலையில் கிடா வெட்டு பூஜையில் வழங்கப்பட்ட உணவோடு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் சுமார் மூன்றரை மணி நேரத்திற்கு மேலாகத் தொடர்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினரும், புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களது புகாரை எழுத்துப்பூர்வமாகக் காவல் நிலையத்தில் வழங்குங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நடவடிக்கை இல்லையென்றால் போராட்டம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகாரை வழங்கிய பின் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதுகுறித்து காவல்துறை கூறியதாவது, "பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த சிலர் கிடா வெட்டு பூஜையில் உணவு உண்டாலும், அதில் சிலர் மது அருந்தியதாகவும், அதேபோல் இரண்டு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும் மது அருந்தும் போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறால் தான் இந்த சம்பவம் நடைபெற்றதாகத் தெரிகிறது என்றும், இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தினாலே நடந்த பிரச்னை எதற்காக நடந்தது என்பது தெரியவரும்" என போலீசார் கூறினர்.
மேலும், மட்டங்கால் பகுதியில் வேறு ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது, அறந்தாங்கி அருகே தாழ்த்தப்பட்ட பெண்கள் குளத்தில் குளிக்கச் சென்ற போது அவர்களைச் சாதிய பெயர் சொல்லி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மலையூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவனை மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் தாக்கியது எனத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாதிய வன்முறைத் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணிக்கு மறுத்த எடப்பாடி பழனிசாமிக்கு கெட்ட நேரம் துவங்கிவிட்டது - தென்காசியில் ஓபிஎஸ் பேச்சு!