தஞ்சாவூர்: தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் போன்றவை கடந்த ஜூலை 3ஆம் தேதி யாரும் எதிர்பாராத நிலையில், தங்களது கட்டணங்களை அதிகரித்தது. குறிப்பாக, தற்போது ஒரு குடும்பத்தில் சராசரியாக 4 பேர் அலைபேசிகளைப் பயன்படுத்துவதால் மாதாந்திர செலவீனத்தில் இப்புதிய கட்டண உயர்வு 2 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் ஆவதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் பலரும் இதனை எப்படிச் சமாளிப்பது மற்றும் எவ்வாறு எதிர்கொள்வது என வழி தெரியாமல் திணறிய நிலையில், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் கட்டணத்தில் எந்தவித உயர்வும் செய்யாதது சற்று அவர்களை நிம்மதியடையச் செய்துள்ளது.
இதனால் தங்களது அலைபேசி எண்களை மாற்றாமல், தொலைத் தொடர்பு நிறுவனங்களை மட்டும் மாற்றிடும் எம்என்பி திட்டத்தில் கடந்த சில நாட்களாக பல தனியார் நிறுவன சேவைகளில் இருந்து விலகி பிஎஸ்என்எல் சேவைக்கு மாறி வருகிறார்கள். இவ்வாறு நேற்று ஒரு நாளில் மட்டும் நாடு முழுவதும் 2 லட்சத்து 93 ஆயிரத்து 630 பேர் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறியுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து கும்பகோணம் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றும் ஊழியர் விஜய் ஆரோக்கியராஜிடம் ஈடிவி பாரத் கேட்டபோது, "சாமானிய மக்களுக்கு ஏற்ற கட்டணத்தில் பிஎஸ்என்எல் சேவை உள்ளதால், கடந்த சில நாட்களாக கும்பகோணம் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் தங்களது அலைபேசி எண்களை மாற்றாமல், எம்என்பி (MNP) திட்டத்தின் வாயிலாக பிஎஸ்என்எல் சேவைக்கு மாறி வருகின்றனர். தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவை வழங்குகிறது. மேலும், கும்பகோணத்தில் இன்னும் 5ஜி சேவை தொடங்கப்படாத சூழலில் 5ஜி சிம்கார்டு மட்டும் வழங்குவதாக தெரிவித்தார்.
எத்தனை லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறி வந்தாலும், அதற்கு ஏற்ப சர்வர்கள் தரம் மேம்படுத்தப்படும் என்றும், சேவை குறைபாடு இன்றி அதனைச் சமாளிக்கும் திறனை பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
கும்பகோணம் சேவை மையத்தில் கடந்த 4, 5 நாட்களாக எண்ணற்றோர் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வருகின்றதாகவும், இவர்களின் வசதிக்காக இதுவரை ஒரு நபர் மட்டும் செய்துகொண்டிருந்த சிம்கார்டு வழங்கும் பணியை தற்போது 3 பேர் செய்து வருவதாக தெரிவித்தார். அதுபோலவே இதுவரை மேனுவலாக வழங்கப்பட்டு வந்த இந்த சிம்கார்டு வழங்கும் பணி நேற்று முதல் விரல் ரேகை பதிவு வாயிலாக தாமதமின்றி நடைபெறுகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக சிம்கார்டை இரவு 8 மணி வரை வழங்கும் வகையில் இதற்கான சேவை தற்போது நீடிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தஞ்சை சரபேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் மீது ஊழல் புகார்.. சிவசேனா குற்றச்சாட்டு!