விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி கஞ்சனூர் மதுரா பூரி குடிசை கிராமத்தைச் சேர்ந்த 7 நபர்கள், கடந்த ஜூலை 8ஆம் தேதி புதுச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்ட சாராயத்தை குடித்துள்ளனர். இதனால் 7 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூலை 10) 5 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இரண்டு பேருக்கு தொடர் குடிப்பழக்கம் இருந்து வந்ததால் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தின் வீரியம் இன்றும் குறையாத நிலையில், புதுச்சேரி சாராயம் குடித்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) July 10, 2024
நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று விடியா திமுக…
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, "நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று முதலமைச்சர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது. அடிப்படை நிர்வாகச் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அண்டை மாநில சாராயங்கள் புழங்குவதை தடுப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து, எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
காவல்துறை தோல்வியடைந்து விட்டது: இந்நிலையில், புதுச்சேரியிலிருந்து கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதை தடுப்பதில் தமிழக காவல்துறை தோல்வியடைந்து விட்டது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், "கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் விற்கப்படுவதையும், கடத்தி வரப்படுவதையும் தடுக்க தமிழக காவல்துறை தவறிவிட்டது என்பதைபே இந்த நிகழ்வு காட்டுகிறது.
புதுச்சேரியிலிருந்து கள்ளச் சாராயம் கடத்தி வரப்படுவதை தடுப்பதில் தமிழக காவல்துறை தோல்வி.
— Dr S RAMADOSS (@drramadoss) July 10, 2024
புதுவை மாநிலம் மதகடிப்பட்டு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி வந்து குடித்த விக்கிரவாண்டி தொகுதி மதுராபூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு…
தமிழக காவல்துறை விழித்துக் கொண்டு எல்லைப் பகுதியில் சோதனையை வலுப்படுத்தி இருந்தால், மதுரா பூரிகுடிசை கள்ளச்சாராய பாதிப்புகளை தடுத்திருக்க முடியும். ஆனால், புதுவையில் இருந்து கொண்டுவரப்படும் கள்ளச் சாராயத்தைத் தடுக்க தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயக் கடத்தலை தடுப்பதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டன. தமிழ்நாட்டிற்கு மது மற்றும் கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.