சென்னை: சென்னை, கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பௌர்ணமி தினம் மற்றும் ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) என்பதால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல அதிகளவிலான பயணிகள் வருகை தந்ததால் ஏராளமான பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டன.
இதனால் மற்ற ஊர்களுக்கு அரசு பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்டது. குறிப்பாக கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, ஜெயங்கொண்டம், பண்ருட்டி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் ஏராளமான பொதுமக்கள் நேற்று (ஜூலை 20) இரவு பேருந்து நிலையத்திலேயே காத்திருந்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் சென்று கேட்ட பயணிகளுக்கு முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் அரசு பேருந்துகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பயணிகள் காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து நள்ளிரவில் பேருந்துகள் இயக்கப்பட்டதை அடுத்து பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், "திருவண்ணாமலைக்கு நாங்கள் பேருந்து விடவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், மற்றவர்களுக்கும் பேருந்தை முறையாக இயக்க வேண்டும். நாங்கள் 9 மணியில் இருந்து காத்துக் கொண்டிருக்கிறோம். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்திலேயே பேருந்துக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் எந்த ஒரு பேருந்தும் வரவில்லை.
அதேபோல குழந்தை குட்டிகளுடன் நாங்கள் பேருந்துக்காக காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, விசேஷ நாட்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டாலும் மற்ற ஊர்களுக்கு பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும். அதனை அதிகாரிகள் உடனிருந்து ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், அதிகாரிகளிடம் சென்று பேருந்து எப்போது வரும் என்று கேட்ட போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர் என்றும் ஒரு சில பகுதிகளில், பயணிகளின் உதவிக்காக இருக்கவேண்டிய எந்த அரசு அதிகாரியும் இல்லை" என்றும் வேதனை தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "இந்தியாவிலேயே அதிக அரசு பேருந்துகள் இயக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு" - அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்!