சென்னை: சென்னை அடுத்த கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த சனிக்கிழமை இரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதன் காரணமாக மற்ற ஊர்களுக்கு செல்ல சரிவர பேருந்துகள் இல்லை எனக்கூறி பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக அமைச்சர் சிவசங்கரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கரன் கூறியதாவது, "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு நேரங்களில் பேருந்துகள் இயக்கம் அதிகம் இருக்காது.
நள்ளிரவு 12 மணியில் முதல் அதிகாலை 4 மணிவரை பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு கருதி மிக குறைவான பேருந்துகள் தான் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரவு 11 மணிக்கு மேல் பேருந்துகள் குறைவாக தான் இயங்கும். பயணிகளின் கோரிக்கையை ஏற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இரவு 12 மணி வரை இயக்கப்படுகிறது.
எனவே பயணிகள் தங்களுடைய பயணத்தை இரவு 12 மணிக்கு முன்னதாகவே திட்டமிட்டு கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தமிழக முதலமைச்சர் கூறியதன் பேரில் தீபாவளி, பொங்கல் போன்ற காலங்களில் மட்டுமல்லாமல், திருவிழா காலங்களிலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடந்த காலங்களை விட தற்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுந்தாற்போல் பயணிகள் தங்களுடைய பயணங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார். மேலும், மின்சார ரயில்கள் ரத்து குறித்து கேட்டபோது, அதற்கு போக்குவரத்து துறையின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு ரயில் பயணம் தடைபடுபவர்கள் பேருந்துகள் மூலமாக செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இரவு 12 மணிக்கு பிறகு ஒரு 50 பேர் சேர்ந்து நேரக் காப்பாளரிடம் சென்று மைக்கை அடித்து உடைப்பதும், அவரை அடிக்கப் பாய்வதும் தவறான விஷயம்" என்று அமைச்சர் சிவசங்கரன் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளை சிறை பிடித்த பயணிகள்.. காரணம் என்ன?