திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பரதேசி ஆறுமுக சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் நேற்று 188வது ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிடும் வினோத வழிபாடு நடைபெற்றது.
அதாவது, கோட்டுப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பரதேசி ஆறுமுக சுவாமி திருக்கோயில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு, பெண்கள் குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று இக்கோயிலில் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
முன்னதாக, ஸ்ரீ பரதேசி ஆறுமுக சுவாமி கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, யாகசாலை அமைத்து ஏராளமான பெண்களை அமர வைத்து சிறப்புப் பூஜை நடைபெற்றது. பின்னர், குழந்தை வரம் வேண்டி கலந்து கொண்ட பெண்கள், சாதுக்களிடம் பிரசாதங்களை தங்கள் முந்தாணியில் பயபக்தியுடன் பெற்றுக் கொண்டு, கோயில் அருகே உள்ள குளக்கரையில் புறங்கை கட்டி, மண்டியிட்டு மண் சோறு சாப்பிட்டு வினோத வழிபாடு நடத்தினர்.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு குழந்தை வரம் வேண்டி வழிபாடு நடத்தி, தற்போது குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் ஆறுமுக சுவாமிக்கு காவடி எடுத்து குழந்தையின் எடைக்கு எடை நாணயம், சர்க்கரை, வெல்லம் போன்ற காணிக்கையை செலுத்தினர். கோயிலில் நடக்கும் அன்னதானத்திற்கு தேவையான அரிசி மூட்டைகள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை வழங்கியும் வழிபாடு செய்தனர்.
மேலும், இந்த மண் சோறு சாப்பிடும் வழிபாட்டில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்