ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கனகராஜ் மற்றும் ரவிச்சந்திரன். இவர்கள் இருவரும் தங்களது விவசாயத் தோட்டத்திற்கு தண்ணீர் குழாய் பதிப்பதற்காக கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஒரு மாதமாக அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் குழாய் பதிக்க அனுமதி வழங்க ஊராட்சி செயலாளர் ராஜு, விவசாயிகள் கனகராஜ் மற்றும் ரவிச்சந்திரனிடம் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் இருவரும் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ரசாயனம் தடவிக் கொடுத்த ரூபாய் நோட்டுகளை விவசாயிகள், செயலாளர் ராஜுவிடம் கொடுத்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் ராஜுவை கையும் களவுமாக பிடித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்ட ஊராட்சி செயலாளர் ராஜூவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் கொத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா,துணைத்தலைவர் சண்முகம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, ஊராட்சி செயலாளர் ராஜூ மீது துறைவாரியான நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்.. போலீஸ் பொறியில் சிக்கிய உதவி பொறியாளர்.. சாத்தூரில் நடந்தது என்ன?