மதுரை: மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தின் சார்பாக இன்று (மே 11) தொடங்கி, மே 16ஆம் தேதி வரை பல்லாங்குழி, தாயம், தட்டாங்கல், நொண்டி, கிட்டிப்புல் ஆகிய பாரம்பரிய விளையாட்டுக்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கேற்கலாம் என அறிவிப்பு செய்து இருந்த நிலையில், இன்று பல்லாங்குழி விளையாட்டில் பங்கேற்க வயதான பெண்கள் உட்பட சிறு குழந்தைகளும் ஆர்வம் காட்டினர்.
முன்பெல்லாம் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்று கூடி வீட்டுக்குள்ளேயே விளையாடுவது வழக்கம் எனக் கூறிய சிந்தாமணியைச் சேர்ந்த சித்ரா, “ஆனால் இப்போது செல்பேசியை பார்ப்பதற்கே நேரம் போதவில்லை என்று இருக்கிறார்கள். இப்படியான ஒரு சூழலில், இது போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த நவீன கம்ப்யூட்டர் காலத்திலும் இவ்வளவு பேர் இந்த விளையாட்டு விளையாடுவதற்காக இங்கு வருகை தந்தது பெருமையாக உள்ளது என்றார். அதனைத் தொடர்ந்து, தோல் மருத்துவர் கலா கூறுகையில், “எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு இது. இங்கு வந்து பார்த்தபோது, எங்களுடைய வயதுக்காரர்கள் தான் நிறைய பேர் இருப்பதைக் கண்டோம்.
நாங்கள் சிறு வயதில் வெளியிலும், வீட்டிலும் ஓயாது விளையாடுவோம். பல்லாங்குழி விளையாட்டைப் பொறுத்தவரை, உளவியல் ரீதியாக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். தோல்வி என்றால் என்ன என்பதை இந்த விளையாட்டின் மூலமாக உணர முடியும். ஒரு விளையாட்டு என்றால், அதில் வெற்றி தோல்வி என்பது சகஜம். எல்லா நேரமும் நான் ஜெயிக்க வேண்டும், தோல்வியைச் சந்திக்க மாட்டேன் என்று இப்போதுள்ள குழந்தைகள் எண்ணுவது தவறான போக்கு.
இது போன்ற மனநிலைகளை தவிர்ப்பதற்காக நமது முன்னோர்கள் பாரம்பரியமாகவே நிறைய விளையாட்டை கற்றுக் கொடுத்தார்கள். அதில் ஒன்றுதான் இந்த பல்லாங்குழி” என்றார். பின்னர், புதூரைச் சேர்ந்த கனகவல்லி கூறுகையில், “பல்லாங்குழி போன்ற விளையாட்டுகள் எல்லாம் யாருக்கும் தெரியாமல் தற்போது மறைந்து கொண்டிருக்கிறது. அதனை மீட்டெடுக்க மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகம் போட்டிகள் நடத்தி ஊக்குவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு கணக்கியல் சார்ந்த விளையாட்டாகும்.
தன்னுடைய எதிராளியை எப்படி தோற்கடிப்பது என மனதிற்குள்ளேயே போட்டுக் கொள்கின்ற மனக்கணக்கின் வாயிலாக தான் இந்த விளையாட்டில் வெற்றி சாத்தியம். இது போன்ற விளையாட்டுகள் குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக்கும். இது போன்ற விளையாட்டுகளால் பொதுமக்களிடம் பாரம்பரிய விளையாட்டு குறித்த விழிப்புணர்வு அதிகமாகும்” என்றார்.
மேலும், மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாடாசியர் முனைவர் மீ.மருது பாண்டியன் கூறுகையில், “தமிழர்கள் விளையாட்டிலும் கூட மிக அறிவுத்திறனுடன்தான் இயங்கி இருக்கிறார்கள் என்பதற்கு நமது பாரம்பரிய விளையாட்டுகளே சான்று. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் தமிழ்நாடு அரசு அண்மையில் ஜல்லிக்கட்டுக்காக அரங்கம் ஒன்றை உருவாக்கியது.
மதுரை மாவட்டம், இடையபட்டியில் 20 கோடி ரூபாய் செலவில் தமிழக பண்பாட்டு பாரம்பரிய கலை பொக்கிஷங்களை பாதுகாக்கும் வகையில் ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகம் இந்த கோடை விடுமுறையில் வயது வித்தியாசமின்றி பல்லாங்குழி, தாயம், கிட்டி, புல் நொண்டி, தட்டாங்கல் மற்றும் கோலிக்குண்டு ஆகிய விளையாட்டுகளில் போட்டிகளை நடத்தி பொதுமக்களை ஊக்குவித்து வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி அபாகஸ் ஆகவும், கிட்டிப்புள் கிரிக்கெட்டாகவும், தாயம் செஸ் ஆகவும் மாறி இருப்பதை காண்கிறோம். நொண்டி விளையாட்டு கீழடி காலத்தில் இருந்து நடந்து வருகிறது என்பதற்குச் சான்றாக, அங்கே அந்த வட்டச்சில்லுகள் கிடைத்துள்ளன. அந்த பாரம்பரியத்தை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவும் இந்த விளையாட்டுப் போட்டிகளை மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகம் நடத்துகிறது” என்றார்.