திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த மந்தாரக்குட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (21) மற்றும் வினித் (19) என்ற இரண்டு இளைஞர்கள், கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக தங்களது கிராமத்திலிருந்து இருசக்கர வாகனம் மூலம் புறப்பட்டு உள்ளனர்.
அப்போது, வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது நண்பர் வினித் படுகாயமடைந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், படுகாயமடைந்த வினித்தை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுகுறித்த தகவல் உடனடியாக வாணியம்பாடி நகர போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பிரகாஷின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அரை மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை.. கூலிங்கான திண்டுக்கல்! - Dindigul Rain