திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே ஆந்திரா மாநிலம் நாகலாபுரம் நோக்கி நெமிலி சாலையில் இன்று (ஜன.27) ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த சீனிவாசன் என்பவர் மீது பேருந்து நேருக்கு நேராக மோதியது. இதனால், சம்பவ இடத்திலேயே சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், அப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பயணிகளுடன் பள்ளத்தில் விழுந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த 30 பேரில் ஏழு பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியினர் பேருந்தில் சிக்கியவர்களைப் பத்திரமாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே, இவ்விபத்துக்குப் பின்னர் அப்பேருந்தின் ஓட்டுநர் அப்பகுதியில் இருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பேருந்து பயணிகள் சிலர் கூறுகையில், பேருந்தை ஓட்டுநர் வேகமாக ஓட்டியதே, எதிரே வந்த வாகனத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளாகக் காரணம் என தெரிவித்துள்ளனர். கனகம்மாசத்திரம் காவல்துறையினர் இது தொடர்பாக கனகம்மாசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகிய ஓட்டுநர் முனுசாமியை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.
இவ்விபத்தில் இருந்து உயிர் தப்பிய மேலும் சில பயணிகள் கூறுகையில், பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் கவனமாகப் பேருந்துகளை இயக்க வேண்டும். குடிபோதையில் வாகனத்தை இயக்கக் கூடாது. அவர்களை நம்பிதான் நாங்கள் பேருந்தில் பயணிக்கிறோம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லையில் தனி ஆளாக கொடி ஏற்றிய மேயர்! விழாவை புறக்கணித்த கவுன்சிலர்கள்