திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்திற்கு இன்று மதியம் 3 மணியளவில் ஜெய்ப்பூரில் இருந்து கோவை செல்கின்ற எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. பின்னர், இந்த ரயில் திருப்பூரில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிச் சென்றது.
அப்போது, திருப்பூர் கள்ளம்பாளையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருக்கையில், அங்கு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் ரயில் வருவதைப் பார்த்து உடனடியாக தண்டவாளத்தில் படுத்துள்ளார். இதனைப் பார்த்துச் சுதாரித்துக் கொண்ட ரயில் பைலட் உடனடியாக எமர்ஜென்சி பிரேக் அடித்து ரயிலை நிறுத்தியுள்ளார். இருப்பினும், ரயில் அந்த முதியவரைத் தாண்டி சென்று நின்றுள்ளது. இதில் அந்த முதியவர் ரயில் இன்ஜினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.
பின்னர், உடனடியாக தண்டவாளத்தில் இறங்கி வந்து பார்த்த ரயில் பைலட் மற்றும் ரயில் ஊழியர்கள் ரயிலை ரிவர்சில் இயக்கி அந்த முதியவரை மீட்டனர். ரயிலைப் பார்த்ததும் உடனடியாக தண்டவாளத்தில் படுத்துக் கொண்டதால் அந்த முதியவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய முதியவரை சாதுரியமாகச் செயல்பட்டுக் காப்பாற்றிய ரயில்வே பைலட்டுகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணி நேரம் தாமதமாகச் சென்றது.
மேலும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் கூறுகையில், முதியவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை, ரயில் வருவதைப் பார்க்காமல் தண்டவாளத்தைக் கடந்துள்ளார். ரயில் பைலட்டுகளின் சாதுரிய செயலால் முதியவர் உயிர் தப்பியுள்ளார் என்றனர்.