சென்னை: மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
அதனைத்தொடர்ந்து வட கிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அதன்பிறகு வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும், தீவிரமடைந்து மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நாளை(மே.25) காலை புயலாக வலுப்பெறக் கூடும் எனவும் அதற்கு ரீமால் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
அந்த வகையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடம்பூர் காட்டாற்று வெள்ளத்தை கயிறு கட்டி கடக்கும் மக்கள்.. 3 ஆண்டுகள் கடந்தும் முடிவுறாத பாலப் பணிகள்!