கோயம்புத்தூர்: வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சாய்பாபாகாலணி பகுதியில் நாம் தமிழர் கோவை மண்டலச் செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் இன்று(பிப்.11) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற வேட்பாளராக மருத்துவர் சுரேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கோவை மண்டல செயலாளர் அப்துல் வகாப், "தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் நாங்கள் அதற்கு தயார் நிலையில் இருக்கிறோம். பாஜக உள்ளிட்ட கட்சிகள் கொள்கை இல்லாமல் தேர்தலை சந்திக்கின்றனர். நாம் தமிழர் கட்சியினர் கொள்கையுடன் நிற்கிறோம். இதுவரை நாங்கள் தனித்தே போட்டியிட்டோம். அதேப்போல இப்போது தனித்தே போட்டியிடுவோம்.
தொடர்ச்சியாக எங்கள் வாக்கு சதவீகிதம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 2016-ஆம் ஆண்டில் வாக்கு சதவிகிதத்தில் 1.1சதவிகிதமாக் இருந்தோம். 2019-ஆம் ஆண்டில் நான்கு சதவீகிதம் பெற்றோம். 2021 சட்டமன்றத் தேர்தலில் 7 சதவீகிதமாக அதிகரித்துள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்டாயம் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும். வாக்கு இயந்திரத்தை வைத்து தான் மோடி வெற்றி பெற்று வருகிறார். மீண்டும் வாக்குச்சீட்டு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு வருகிறோம். கட்டாயம் நாம் தமிழர் இம்முறை வெல்லுவோம்" எனக் கூறினார்.
பின்னர் பேசிய கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கலாமணி, "கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டேன். இந்த முறையும் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண களம் இறங்குகிறோம். கோவை தடாகம் பகுதியில் கனிமவள கொள்ளை நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும். குடிநீர் , சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மக்களிடம் கொள்கைகளை கொண்டு சேர்க்க வேண்டும்" எனக் கூறினார்.
அதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி வேட்பாளர் சுரேஷ் கூறுகையில், "மத்திய அரசின் தவறான வரிக்கொள்கையே நாட்டில் நிலவக்கூடிய பல்வேறு பிரச்சனைக்களுக்கு முக்கிய காரணம். ஜி.எஸ்.டி பிரச்சனைகளால் தொழில் பாதிக்கப்பட்டது. போதிய நிதியை வழங்காததால் மாநில அரசும் மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்தியுள்ளனர். இந்தத் தேர்தலில் எங்கள் தொகுதியில் நிலவிவரும் பிரதான பிரச்சனைகளை முன் வைத்து எங்கள் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கை.. ராமேஸ்வரத்தில் திமுக போராட்டம்!