நீலகிரி: தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த காலகட்டத்தில், முன்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில் மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்யும்.
இந்த காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 200 மில்லி மீட்டர் வரையும், வடகிழக்கு பருவமழை 300 மில்லி மீட்டர் பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக பருவமழை காலகட்டத்தில் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகள் தான் பேரிடர்களால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபாயமுள்ள பகுதி: அதே போல் மாவட்டத்தில் மொத்தம் 283 இடங்கள் பேரிடர் அபாயமுள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் பேரிடர்கள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பேரிடர் மீட்பு குறித்த செயல் விளக்க நிகழ்ச்சிகளும் மாவட்ட நிர்வாகத்தால் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றது.
இதையும் படிங்க: அடுத்த ஒரு வாரத்திற்கு அடைமழைதான்! மறக்காம கொடைய எடுத்துட்டு போங்க!
தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்: இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,"மாநில நெடுஞ்சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண் சரிவு ஏற்பட்டும் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் மற்றும் ஜேசிபி எந்திரங்கள், பேரிடர் காலத்தில் பயன்படுத்தப்படும் உபகரண பொருட்கள் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு ஏற்படும் சமயங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக உடனடியாக செயல்பட்டு சாலைப் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, பொதுப்பணித் துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.