தஞ்சாவூர்: வடமாநில தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் முதன்முதலில் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் கட்டிட வேலைக்காக வருகை புரிந்தனர். அதனை தொடர்ந்து தற்போது சூப்பர் மார்க்கெட், பின்னலாடை, கோழிப்பண்ணை, சிறு வணிக நிறுவனங்கள், சலூன் கடைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இங்கு அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விவசாயம், மீன்பிடி தொழில் உள்ளிட்ட பாரம்பரிய தொழில்களில்கூட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் கூட, மயிலாடுதுறை அருகே வடமாநிலத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் இந்தியில் பாடல்கள் பாடியபடி நாற்று நடவில் ஈடுபட்டது பலரது கவனத்தை ஈர்த்தது.
இவர்களின் பெரும்பாலான தொழிலாளர்கள் பீகார், ஹரியானா, அசாம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தங்கி வேலை செய்கின்றனர். அப்படி வரும் நபர்கள் மிக குறைந்த சம்பளத்திலும், நேரம் பார்க்காமல் உழைத்து வருகிறார்கள்.
மேலும் ஒருமுறை ஊருக்கு சென்று வந்தால் பல மாதங்களுக்கு விடுமுறை எடுப்பது கிடையாது என்று கூறி, பல்வேறு நிறுவனங்கள் இவர்களை பணியமர்த்தி வருகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட கால இடைவேளையில் அவர்கள் சொந்த ஊர் சென்று திரும்புவது வழக்கம்.
அவ்வாறு சொந்த ஊருக்கு செல்லும்போது குறைந்தது 15 முதல் 45 நாட்கள் வரை விடுமுறை எடுத்து செல்வர். அவ்வாறு கடந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற சென்ற 200க்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் நேற்று தஞ்சாவூர் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
தொடர்ந்து தஞ்சை பழைய பஸ் நிலையம் நோக்கி சாரை சாரையாக நடந்து சென்றனர். பின்னர் அங்கிருந்து பஸ்கள் மூலம் அரியலூர் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் அங்குள்ள சிமெண்ட் ஆலைகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "நாய், பாம்பு கடிக்கு 24 மணி நேரமும் மருந்து செலுத்துக"- பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுரை!