நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்திற்கு அரக்கோணத்தில் இருந்து 32 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உதகை வந்தடைந்தனர். இந்நிலையில், இன்று உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கொண்டு வந்துள்ள மீட்பு பணிகளுக்கான உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவியா தண்ணீரு பார்வையிட்டார்.
அதற்குபின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “நீலகிரியில் 20 நாட்களுக்கும் மேலாக கொட்டித் தீர்க்கும் கனமழையின் காரணமாக மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்ள சென்னையிலிருந்து புவியியல் துறையினர் குழு வர உள்ளனர்.
மேலும், தற்போது கூடலூர் பகுதியில் புவியியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் தலைமையில் பொதுப்பணித் துறையினர் கோக்கால் பகுதியில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு பூமியில் உள்வாங்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இரண்டாவது குழுவினர் வரும் வாரங்களில் வர உள்ளனர்.
எனவே, 24 மணி நேரமும் வருவாய்த்துறை, தீயணைப்புத் துறையினர் உட்பட அனைத்து துறைகளைச் சேர்ந்த 500 பேர் மீட்புப் பணிகளுக்கு தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் நிலையில், பேரிடர் நடைபெற்றால் உடனடியாக 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பாதுகாப்பாக மக்களை மீட்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
வயநாடு போல் நீலகிரியிலும் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இது போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரியில் பெய்து வரும் மழையின் நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாள்தோறும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டு வருகிறார்” என்றார்.
இந்நிலையில், கனமழையால் நேற்று மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில் பாதையில் ஹில்க்ரோ ஆர்டர்லி இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி வந்த மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் திரும்பிச் சென்றது.
எனவே, இந்த மண்சரிவுகள் அகற்றப்பட்டு வருவதால், 5 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மலை ரயில் பாதையில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் 30-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: எல் நினோ Vs லா நினா.. வயநாடு நிலச்சரிவுக்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன?