சென்னை: பூந்தமல்லி ராமானுஜர் கூடத் தெருவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில், பூந்தமல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி இரவு இந்த விடுதி அருகே இருக்கும் குப்பைத் தொட்டியில், பச்சிளம் பெண் குழந்தை ஒன்று எறும்புகள் மொய்த்த படி, குப்பைகளுக்கு நடுவே, உயிருக்கு போராடி நிலையில் இருந்துள்ளது. குழந்தை அழும் சத்தம் கேட்டு, அந்த தனியார் விடுதியின் உரிமையாளர் யுவராணி என்பர் மீட்டுள்ளார்.
பின்னர், பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மேலும், குழந்தையை மீட்டெடுத்த யுவராணி, குழந்தைக்கு அதிர்ஷ்ட லட்சுமி என பெயர் சூட்டி மகிழ்ந்திருந்தார்.
முன்னதாக இரண்டு நாட்களாக குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட போது, அப்பகுதி மக்கள் பூனையின் சத்தமாக இருக்கலாம் என்று எண்ணியுள்ளனர். அதன் பின்னர், குழந்தையை மீட்டெடுத்த பிறகு தான் இரண்டு நாட்களாக வந்த சத்தம் பச்சிளம் குழந்தையுடது என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்திய 15 இளைஞர்கள் கைது..நாமக்கல்லில் திடுக்கிடும் பின்னணி
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, பச்சிளம் குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசி சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தை இன்று (மார்ச் 6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
மேலும், இந்த குழந்தை கடந்த 20 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததும், அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஒரு வாரத்திற்கு முன்பு குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தங்களுடையது என ஒரு காதல் ஜோடி பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரணடைந்து வாக்குமூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வீட்டில் தந்தை சடலம்.. தந்தையின் கனவை நனவாக்க கண்ணீருடன் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி!