சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தனியார் வளாகத்தில், தனியார் பல்கலைக்கழகம் சார்பில், பாய்மரப் படகு போட்டி பிரிவில் இந்தியா சார்பில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி இருக்கும் நேத்ரா குமணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தனியார் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர் பச்சமுத்து பங்கேற்று, பாய்மரப்படகு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு ஊக்கத் தொகையாக ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீச்சல் பயிற்சி குளத்திற்கு நேத்ரா குமணன் என பெயரையும் சூட்டுவதாகத் தெரிவித்தார்.
பின்னர், பாய்மரப் படகு வீராங்கனை நேத்ரா குமணன் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், "ஜூலை மாதம் நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நிச்சயம் பதக்கம் வெல்வேன். இந்தியா சார்பில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒலிம்பிக்கில் இரண்டாவது முறையாக இந்திய அணிக்காகத் தகுதி பெற்றுள்ளேன்.
கடந்த மூன்று மாதங்களாக ஒலிம்பிக் போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருகிறேன். பாரிஸ் நகரில் உள்ள காலநிலை அறிந்து கொண்டு, அதிக வேகத்துடன் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். பாரிஸ் நகரைப் பொறுத்தவரையில், தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். அதேநேரம் சூடாகவும் மாறும். போட்டி நடைபெறும் இடம் அதிக காற்றுடன் அமர்ந்த தண்ணீராகவும் இருப்பதால், போட்டி மிகக் கடுமையானதாக மாறும்.
என் போட்டியின்போது எப்படிப்பட்ட சூழ்நிலை வேண்டுமானாலும் இருக்கலாம். என்னுடைய முழு முயற்சியும் செய்திருக்கிறேன். சென்னையில் தான் பாய்மரப் படகு போட்டிக்கான பயிற்சியைத் தொடங்கினேன். சென்னை இப்பொழுதும் எனது விருப்பமான இடமாக உள்ளது. தமிழ்நாடு அரசு எனது பயிற்சிக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளது. பயிற்சிக்கும், என்னுடைய பயணச் செலவிற்கும் ஊக்கத்தொகை அளித்திருப்பது மிகவும் உதவியாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவிஷீல்டு தடுப்பூசிப் போட்டவரா நீங்கள்.. மருத்துவரின் அறிவுறுத்தல் உங்களுக்காக.! - Covishield Is Safe Or Not