திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியின் ஏழாவது மேயராக பதவியேற்றுள்ள நெல்லை டவுணை சேர்ந்த ராமகிருஷ்ணன் பதவி ஏற்பு விழா முடிந்த கையோடு அவருக்கு கொடுக்கப்பட்ட அரசு சொகுசு காரை பயன்படுத்தாமல் தனக்கு இந்தனை ஆண்டுகளாக துணையாக இருந்த சைக்கிளில் அவருக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்ற செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறுகலான தெருவில் சாதாரண வீடு, மக்களின் குறைகளை கேட்டறிய ஒரு பழைய ஹெர்குலஸ் சைக்கிள் என எளிமையான பின்னணியை கொண்ட ராமகிருஷ்ணன் தான் இன்று (சனிக்கிழமை) நெல்லையின் ஏழாவது மேயராக பதவியேற்றுள்ளார்.
சிறுவயது முதலே திமுகவின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இவர், 1980ம் ஆண்டு முதல் கட்சிக்காக உழைத்து வருகிறார். பழமையான வீடு குடும்பம் என எந்த ஆடம்பரமும் இல்லாமல் வாழ்ந்து வரும் கிட்டுவிற்கு சைக்கிள் தான் உலகம். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இருசக்கரம் வாகனம் கூட பயன்படுத்தாமல் தனது சைக்கிளில் சுற்றி திரியும் இவர், மாமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னரும் மக்களின் குறைகளை சைக்கிளில் சென்றே கேட்டு வந்துள்ளார்.
இதற்கிடையில், நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து கடந்த ஐந்தாம் தேதி புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. ஆளுங்கட்சியான திமுக சார்பில் கிட்டு(எ) ராமகிருஷ்ணன் போட்டியிட்ட நிலையில், 30 வாக்குகள் பெற்று ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இன்று நடந்த பதவி ஏற்பு விழாவுக்கு ராமகிருஷ்ணன் தனது வீட்டில் இருந்து சைக்கிளில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அதனை தொடர்ந்து பதவி ஏற்பு விழா முடிந்த கையோடு அரங்கத்தை விட்டு வெளியே வந்த மேயரை அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள மேயர் அலுவலகத்துக்கு அழைத்து செல்ல மேயருக்கான அரசு சொகுசு கார் தயாராக இருந்தது.
ஆனால் தனது உதவியாளிடம் தற்போது எனக்கு கார் வேண்டாம் இங்கிருந்து எனது அறைக்கு சைக்கிள் செல்கிறேன் என்று கூறி காரை ஓரங்கட்டி விட்டு மீண்டும் தனது சைக்கிளை எடுத்தபடி அலுவலகத்திற்கு வந்தார் அப்போது மேயரின் டபேதர் செங்கோலை ஏந்தியபடி மேயரை பின்தொடர்ந்தார்.
பின்னர், தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்ற ராமகிருஷ்ணன் வேலைகளை முடித்து விட்டு தனது காரில் ஏறிச் சென்றார். தனது வாழ்நாளில் இதுவரை கார் வாசமே படாத மேயர் ராமகிருஷ்ணன் முதல் முறையாக அதுவும் மேயர் என்ற உயரிய பதவியோடு உயர்ந்த காரில் ஏறியது அவரது உள்ளத்தில் ஒருவித நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்