சென்னை: நீட் தேர்வு முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதன் மூலம் சமீபத்திய NEET முறைகேட்டிலிருந்து இருந்து தப்பிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும்.
மாநிலங்களின் உரிமையைப் பறித்த பிறகு, முறைகேடுகள் மற்றும் ஒழுங்கற்ற முறையில் தேர்வுகளை நடத்துதல் போன்ற முக்கியப் பிரச்சனைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப அனுமதிக்கக்கூடாது.
ஒன்றிய அரசின் திறமையின்மையையும், இலட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையைப் பற்றிய அவர்களின் அக்கறையின்மையையும் கண்டிக்கும் அதே வேளையில், மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்' என்று தமது பதிவில் ஸ்டாலின் தெரிித்துள்ளார்.
முன்னதாக, எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்நிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் ஜுன் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை (National Testing Agency) நடத்திய நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆள் மாறாட்டம், குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் அதிகம் பேர் நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றது, ஒரே தேர்வு மையத்தில் ஒன்றாக தேர்வெழுதிய மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்தது, தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குறிப்பாக பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார் சர்ச்சையானது. மேலும் நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720 க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததும், அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 போ் முதலிடம் பிடித்தது உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையைக் கிளப்பின.
இவ்வாறாக நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் மறுதோ்வு நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
மேலும் அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுவதாகவும், விருப்பமுள்ள மாணவர்கள் மறு தேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருப்பமுள்ள மாணவர்களுக்கு ஜூன் 23 ஆம் தேதி தேர்வுகள் நடத்தப்பட்டு, ஜூன் 30 ஆம் தேதிக்கு முன் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு விவகாரம்: தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு! - அமைச்சர் சொன்னது என்ன?