சென்னை: டெல்லியில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடத்தப்பட்ட வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுவரை இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த போதைப் பொருள் கடத்தல் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருப்பதும் அதன் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பு பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த வருவாயை, வேறு யாருக்கெல்லாம் கொடுத்துள்ளார்? என்பது குறித்து தொடர்ந்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக் உடன் திரைப்படத் தயாரிப்பில் தொடர்பில் இருந்தவர்கள், தொழிலில் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டவர்களை விசாரிக்க திட்டமிட்டனர்.
இயக்குனர் அமீருக்கு சம்மன்: அதன்படி, நடிகரும், இயக்கநருமான அமீர் என்பவருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். அந்த சம்மனில் வரும் இரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளது.
அதேபோல் அப்துல் பாசித் புகாரி, சயத் இப்ராஹிம் ஆகியோருக்கும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளது. நடிகரும் இயக்குநருமான அமீர், ஜாபர் சாதிக்கு உடன் ஓட்டல் நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் அப்துல் பாசித் புகாரி,சயத் இப்ராகிம் ஆகியோரும் ஜாபர் சாதிக் உடன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் இவர்களும் போதைப்பொருள் கடத்தலுக்கு தொடர்பில் இருந்தார்களா என்ற கோணத்தில் இந்த விசாரணை செய்வதற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் கிடைக்கப்படும் தகவல்களை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்திருப்பதால், அடுத்த கட்டமாக அவர்களும் இந்த வழக்கை கையில் எடுத்து விசாரணை மேற்கொள்ள போவதாக தகவல் வெளியாகி உள்ளது.