சென்னை: தஞ்சாவூரில் பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியை கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில், சமூக ஆர்வலர் சரவணன் புகார் அளித்ததை தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையம் புகாரை பதிவு செய்துள்ளது.
முதல்வர் இரங்கல்
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணி (26) மதன் (30) என்பவரால் நேற்று (நவ.20) பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மதனை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துடன், 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். மேலும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியை கொல்லப்பட்ட சம்பவம் தெரிந்தவுடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அது குறித்து விசாரணை செய்ததுடன், சென்னையில் இருந்து நேரடியாக தஞ்சாவூர் சென்று ரமணியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி ரமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மேலும், '' இது போன்ற சம்பவம் பள்ளிக்குள் நடந்திருக்கக் கூடாது. ஆசிரியர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து முதலமைச்சர் என்னிடம் கேட்டறிந்தார். சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியையின் மறைவு உள்ளபடியே வேதனைக்குள்ளான ஒன்று. கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்துக்கு அரசு என்றும் துணை நிற்கும். ஆசிரியர்கள் பணி பாதுகாப்புக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றவாளிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் வாதாடாமல் இருக்க வேண்டும் என வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
இந்த நிலையில், விழுப்புரத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் சரவணன் தேசிய மனித உரிமை ஆணையத் தலைவருக்கு புகார் அளித்துள்ளார். அதில், தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 19.11.2024 செவ்வாய்க்கிழமை அன்று 26 வயதுடைய பள்ளி ஆசிரியை ரமணி ஒருவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
ரமணி காலையில் பள்ளி வகுப்பறையில் பாடம் சொல்லிக் கொண்டிருந்த போது கத்தியால் குத்தப்பட்டார்; நான்கு மாதங்களுக்கு முன்புதான் வேலைக்குச் சேர்ந்துள்ளார். மதன் என்று அடையாளம் காணப்பட்ட நபர், ஊழியர்கள் அறைக்கு வெளியே ரமணியை தாக்கியதற்கு மாணவர்கள் மற்றும் பிற ஊழியர்களை சாட்சிகளாகக் கொண்டுள்ளனர். இதையடுத்து மதனை போலீசார் கைது செய்தனர்.
அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஏனெனில் பள்ளி வேலை நேரத்தில் வெளியில் இருந்து வருபவர்கள், தெரியாத நபர்களைக் கட்டுப்படுத்த தமிழகத்தின் பல அரசுப் பள்ளிகளில் சரியான பாதுகாப்பு மற்றும் கேட் அமைக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பள்ளிகள் போதிய பாதுகாப்பின்றி இருக்கிறது.
தயவு செய்து தேவையான நடவடிக்கை எடுத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில், வாட்சன் மேன் நியமனம் செய்ய, தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார். இந்த புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் பெற்றுக்கொண்ட நிலையில், பள்ளிக் கல்வித் துறை செயலாளருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்