திருநெல்வேலி: அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ், திருநெல்வேலியில் இருந்து தென்காசி, வள்ளியூர், நாகர்கோயில், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு சுங்கச்சாவடி கட்டணம், அந்தந்த போக்குவரத்து கழக தலைமை சார்பில், ஃபாஸ்ட் டேக் ( FASTag ) மூலம் மொத்தமாக கட்டப்படுகிறது. அதே சமயம், சில போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் நிதிநிலை காரணமாக, சுங்கச்சாவடி கட்டணம் முறையாக கட்டப்படுதில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தின், வள்ளியூர் டிப்போவில் இருந்து இன்று காலை வள்ளியூர் - திருநெல்வேலிக்கு பேருந்து ஒன்று இயக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நாங்குநேரி சுங்கச்சாவடியை கடைக்க முயன்ற நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள், பேருந்தின் ஃபாஸ்ட் டேக்கை ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது, அதில் பணம் இல்லாததை அறிந்த ஊழியர்கள் பேருந்தை சுங்கச்சாவடி வழியாக மேற்கொண்டு இயக்க மறுத்துள்ளனர்.
இதனையடுத்து, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும், இந்த ஒரு முறை சுங்கச்சாவடி வழியாக வழக்கம் போன்று பேருந்தை அனுமதிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், ஊழியர்கள் பேருந்தை அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், வேறு வழியின்றி, ஓட்டுநர் பேருந்தை அருகில் உள்ள ஸ்ரீ வர மங்கை புரம் என்ற கிராமத்தின் வழியாக சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் சுற்றி மாற்றுப்பாதையில் பேருந்தை இயக்கியுள்ளார்.
இது குறித்து, வள்ளியூர் டிப்போ மேலாளரை, ஈடிவி பாரத் பிரத்யேகமாக தொடர்பு கொண்ட நிலையில், “அந்த பேருந்தில் ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் மாற்றி ஓட்டப்பட்டுள்ளது. வேறொரு பேருந்திற்கான ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் இந்த பேருந்தில் ஒட்டப்பட்டிருந்ததால் பேருந்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், பேருந்து முறைப்படி வள்ளியூரில் இருந்து பெருமளஞ்சி, வகைகுளம் வழியாக நாங்குநேரிக்கு வந்து, அதன்பிறகே நெடுஞ்சாலை வழியாக சுங்கச்சாவடியை கடந்து பானாங்குளம் மூன்றடைப்பு வழியாக திருநெல்வேலிக்கு செல்ல வேண்டும். ஆனால், அதிகாரிகள் வேண்டுமென்று, இந்த கிராம பகுதிகள் வழியாக பேருந்தை இயக்காமல், வள்ளியூரில் இருந்து நேரடியாக நெடுஞ்சாலை வழியாக திருநெல்வேலிக்கு இயக்கி வருதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு பேருந்தாக இருந்தாலும், சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாத காரணத்தினால், சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்தை அனுமதிக்காமல் திருப்பி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று பல்வேறு பேருந்துகளில் கட்டணம் முறையாக கட்டாததால், சுங்கச்சாவடி ஊழியர்கள் கண்டிப்பாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.