சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்த பின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சி அமைந்து 39 மாதங்களில் கோவில் திருப்பணிகளுக்கு பெரிய அளவு முக்கியத்துவம் தந்து வருகிறோம். கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகளை தொடர்ந்த ஆய்வு செய்து பக்தர்களிடைய தேவைகளை நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 30ஆம் தேதி சுமார் 9 கோவில்களில் குடமுழுக்கு நடக்க உள்ளது. அவற்றோடு இந்து சமய வரலாற்றில் 39 மாதங்களில் 2000 குடமுழுக்குகளை செய்து மிகப்பெரிய சாதனை படைக்க உள்ளது. இந்த ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 6,850 ஏக்கர் நிலம், 6,770 கோடி 36 லட்சம் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
முருகன் மாநாட்டில் எந்தவிதமான அரசியலும் இல்லை. முருகர் மாநாடு வரலாற்றில் ஒரு மைல்கல். கலைஞர்கள், அறிஞர்கள் சான்றோர்கள் என இன, மொழி, மதத்திற்கு அப்பாற்பட்டு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கூட மாநாட்டில் பங்கேற்றனர். சமய சார்பற்ற மாநாடு அல்லாமல் அனைவரும் பங்கேற்ற ஒரு மாநாடாக விளங்கியது. இது ஒரு சிலருக்கு வயிற்று எரிச்சலாக இருக்கத்தான் செய்யும்.
இந்து சமய அறநிலைத்துறையை பொறுத்த வரை திருக்கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கல்லூரி மற்றும் பள்ளிகளில் தான் கந்த சஷ்டி கவசத்தை கொண்டு வருவதாக தெரிவித்துள்ளோம். அதை எங்கள் தீர்மானத்தில் தெளிவாக தெரிவித்ததுள்ளோம். இது குறித்து கம்யூனிஸ்ட் மற்றும் விசிக நண்பர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நமீதாவை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அனுமதிக்காமல் இந்து என்ற சான்றிதழ் கேட்டது தொடர்பான கேள்விக்கு, இந்த சம்பம் குறித்து நமிதா பதிவை கேட்டேன். இது குறித்து விசாரிப்பதற்கு உடனடியாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நமிதா மனது புண்படும்படி, சட்டத்திற்கு புறம்பாக எதுவாக நடந்திருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். நமிதா வருத்தப்பட வேண்டாம், அவர் வருத்தப்படுவதாக இருந்தால் நாங்கள் எங்களுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
முத்தமிழ் முருகன் மாநாடு வரக்கூடிய ஆண்டுகளில் நடக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, முதலமைச்சர் உத்தரவு கொடுத்தால் , முருகன் அருள் ஆசியும் இருந்தால் இது போன்ற மாநாடு தொடரும். ஆன்மீகத்தை கையில் எடுக்காமல் அரசியல் செய்ய முடியாது என்று தமிழிசை சௌந்தரராஜனின் கருத்து குறித்த கேள்விக்கு, முருகன் வேல் தூக்கி அவர்கள் கூட ஊர் ஊராக அலைந்தார்கள். முருகனின் பெருமை கடல் கடந்து சென்று சேர தமிழக முதலமைச்சர் கையில் ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று தான் அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் நமது முதலமைச்சரை முதலமைச்சராக முருகன் ஆக்கியுள்ளார்.
இந்த முருகன் மாநாட்டில் 750 மேலைநாட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். மொரீஷியஸ், ஜெர்மன், மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல்வேறு முருக பக்தர்கள் பங்கேற்றனர். திராவிட முன்னேற்றக் கழகமே ஜனநாயக கட்சி. எங்கெல்லாம் சாத்திய கூறுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் படிப்படியாக தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஒற்றை இலக்கத்தில் மதுரை காமராஜர் பல்கலையில் மாணவர் சேர்க்கை? இந்த நிலைக்கு காரணம் என்ன? என்ன செய்ய வேண்டும்?