கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அந்த அண்ணன் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். கணவன் வெளிநாட்டில் இருப்பதால், இவரது 28 வயதான மனைவி தாயார் வீட்டிலும் கணவர் வீட்டிலும் மாறி மாறி வசித்து வந்தார். இந்நிலையில், பெண்ணின் மாமியாரும். கொழுந்தனும் கருங்கல் அருகே உள்ள சொந்த வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், 28 வயதான அந்த பெண், கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாழக்குடி பகுதியில் ஒரு சுடுகாட்டில் பலத்த காயங்களுடன் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். இது பற்றி அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணை கொன்றது அவரது கணவரின் சகோதரர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. அவரை உடனே கைது செய்த ஆரல்வாய்மொழி போலீசார், அவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் நடைபெற்ற விசாரணையில், கொழுந்தனுக்கு அண்ணியின் நகைகளை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்து இருந்தார்.
இந்நிலையில், அண்ணிக்கு சிறிது கடன் பிரச்சினை ஏற்பட்டதால் தனது நகைகளை தனியார் வங்கியில் அடகு வைத்து இருந்தார். கணவன் வெளிநாட்டில் இருந்து பணத்தை அனுப்பியதும், நகையை திருப்ப வேண்டுமென நினைத்து இருந்தார்.
அதன்படி, கணவர் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பியதுடன் நகையை திருப்புவதற்காக தனது மாமியார் வீட்டிற்கு வந்து, வங்கியில் அடகு வைத்த நகையை திருப்பி எடுத்து உள்ளார்.
தனது அண்ணி நகையை திருப்பியதை அறிந்த கொழுந்தன் அவர் ஓட்டி வந்த வாடகை காரில், அண்ணியை அவரது தாயார் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்று உள்ளார். இதுதான் அண்ணியின் நகைகளை அபகரிப்பதற்கு சரியான தருணம் என கொழுந்தன் முடிவெடுத்து காரை வேறு ஒரு பாதைக்கு திருப்பி உள்ளான்.
மேலும், இது குறித்து அண்ணி கேட்க, காரை மறைவான இடத்தில் நிறுத்தி விட்டு காரில் இருந்த கம்பியால் அண்ணியின் தலையில் அடித்துள்ளார். இதனால், அண்ணி மயக்கம் அடைந்தார். அப்போது சபலம் ஏற்பட்டு, அண்ணி என்றும் பார்க்காமல் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அவரை கொலை செய்துவிட்டு, காரில் பின் இருக்கையில் சடலத்தை போட்டுவிட்டு ஆரல்வாய்மொழி அருகே உள்ள தாழக்குடி ஊர் பகுதியில் ஒரு சுடுகாட்டில் உடலை போட்டுவிட்டு நகையை எடுத்து தப்பித்து சென்றது தெரிய வந்தது.
இந்த வழக்கு, நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நீதிபதி சுந்தரையா குற்றவாளியான கொழுந்தனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் அவருக்கு அபராதமாக 3 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சீமானுக்கு வருத்தக் கடிதம் எழுதிய சிவராமன்.. மரணத்தில் என்ன சொல்கிறது நாதக?