சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தங்கையுமான மு.க.செல்வியின் கணவர் தான் முரசொலி செல்வம். இவர் கருணாநிதியின் மனசாட்சி என்று அழைக்கப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடன் பிறந்த தம்பி ஆவார்.
உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முரசொலி செல்வம் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். திமுக கட்சியின் கொள்கைகளை கடைக்கோடி தொண்டர்கள் வரை கொண்டு சேர்ப்பதற்காக கருணாநிதியால் தொடங்கப்பட்ட முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்ததால், முரசொலி செல்வம் என்றே அறியப்படுகிறார்.
முரசொலி செல்வம் மறைவு தொடர்பாக சென்னை பிரஸ் கிளப் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், பத்திரிகை சுதந்திரத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. 1992ம் ஆண்டு தமிழ்நாடு வரலாற்றில் முதல் பத்திரிகையாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் சம்மன் அனுப்பப்பட்டு ஆஜரானவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்திரிகையாளரும் முரசொலியின் முன்னாள் ஆசிரியருமான முரசொலி செல்வத்தின் மறைவுக்கு சென்னை பிரஸ் கிளப் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. pic.twitter.com/DSTCaS4UnM
— Chennai Press Club SGCசென்னை பத்திரிகையாளர் மன்றம் (@MadrasJournos) October 10, 2024
சட்டமன்றத்தின் அவை நடவடிக்கைகள் குறித்து எழுதியதாக, உரிமை மீறல் குழுவால் சம்மன் அனுப்பப்பட்டு முரசொலி செல்வம் சட்டமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டார். "சபாநாயகரால் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படாததை பத்திரிகையில் வெளியிட்டது தவறில்லை, இதற்காக மன்னிப்பு கோர முடியாது" என முரசொலி செல்வம் வாதிட்டார். இவருக்காக அன்றைய தினம் சட்டமன்றத்தில் விசாரணைக் கூண்டு அமைக்கப்பட்டது. என் மகளை மணந்த நாளை விடவும், அந்த கூண்டிலே தான் செல்வம் புன்னகையோடிருந்தார் என கருணாநிதி கூறியதாகவும் சென்னை பிரஸ் கிளப் தனது இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
1992ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி நிகழ்ந்த போது சேடப்பட்டி முத்தையா சபாநாயகராக இருந்தார். இதே போன்று 2003ம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சிக் காலத்தில் தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான தலையங்கத்தை மறு பிரசுரம் செய்ததற்காக முரசொலி செல்வம் மீண்டும் சட்டமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டார். அப்போது சபாநாயகராக இருந்த காளிமுத்து, தலையங்கத்தின் உள்ளடக்கம் தமது செயலுக்கு உள்நோக்கம் கற்பிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
முரசொலி செல்வம் மறைவு தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கலைஞர் மறைவுக்குப் பின் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். கலைஞரும், முரசொலி மாறனும் மனதில் நினைப்பதை எழுத்திலும், செயலிலும் நிறைவேற்றியவர் முரசொலி செல்வம் எனவும், மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர், என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம்.
— M.K.Stalin (@mkstalin) October 10, 2024
தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான்… pic.twitter.com/rxV7ROsXg9
சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் அவர் எழுதிய நையாண்டியும், நகைச்சுவை ததும்பும் கட்டுரைகள் இளம் தலைமுறையினருக்கு கொள்கை ரத்தம் பாய்ச்சும் வலிமை கொண்டவை என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சிறுவயது முதலே எனக்கு அண்ணனாகவும், வழிகாட்டியாகவும், கட்சிப்பணிகளில் ஆலோசனை வழங்கி, நெருக்கடி நேரங்களில் தீர்வுகளை முன்வைத்து தோளோடு, தோள் நின்றவர் முரசொலி செல்வம்" எனவும் மு.க.ஸ்டாலின் தமது இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார்.
அரைக்கம்பத்தில் பறக்கும் திமுக கொடி: 'முரசொலி செல்வத்தின் மறையையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு திமுக அமைப்புகள் அனைத்தும் கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.