கரூர்: சென்னை - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு இடையே இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களை காணொலிக் காட்சி மூலமாக நேற்று பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இந்த நிலையில் மதுரையிலிருந்து கரூர் வழியாக பெங்களூரு சென்ற வந்தே பாரத் ரயிலை, பாஜக கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் மற்றும் ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சக்தி உள்ளிட்ட பாஜகவினர் கரூர் ரயில் நிலையத்தில் இருந்து மலர் தூவி வரவேற்றனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் கரூர் எம்பி ஜோதிமணி, கரூர் ரயில் நிலையத்திலிருந்து வந்தே பாரத் ரயிலுக்கு பச்சைக்கொடி காட்டி வழி அனுப்பி வைத்தார். தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு வருகை தந்த வந்தே பாரத் ரயிலுக்கு பள்ளி மாணவ மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், ரயிலில் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த ரயில் பயணிகள், கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவிகள் ரயிலில் ஏறி சேலம் நோக்கி பயணம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, "மதுரையிலிருந்து கரூர் வழியாக பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடந்தபோது, கரூர் ரயில் நிலையம் முக்கியமான தொழில் நகரமாக இருப்பதால் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் வகையில் ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தேன். அதனடிப்படையில் ஆக.31 முதல் கரூர் ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் வகையில் தொகுதி மக்களுக்காக கோரிக்கை வைத்து பணியாற்றியுள்ளேன்.
கரூரில் மட்டும் நான்கு ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கரூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
கடந்த முறை கரூர் ரயில்வே நிலையம் மேம்படுத்தல் நிகழ்ச்சியின் போது கல்வெட்டில் செந்தில் பாலாஜி பெயர் இல்லை. தற்போது அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், நடைபெற்று முடிந்தவுடன் திறப்பு விழா நிகழ்ச்சியில், கல்வெட்டு பதிக்கும் பொழுது, கரூர் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக எம்எல்ஏக்கள் பெயரைக் கல்வெட்டில் பதிக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில், சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், கரூர் ரயில் நிலைய மேலாளர் இக்ஜீசியஸ் சேவியர், பாஜக மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார், கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் ஆறுமுகம், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், கரூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்