சேலம்: 6 மாத குழந்தையின் இதய அறுவைச் சிகிச்சைக்கு நிதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தையுடன் வந்த தாய், குழந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என கண்ணீர் மல்க தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
சேலம் எடப்பாடி சித்தனுர் கிராமம் சென்றாயன் காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. தனியார் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு அக்சயா என்ற ஆறு மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இக்குழந்தைக்கு இதயத்தில் மூன்று இடத்தில் துளைகள் இருப்பதாக தனலட்சுமி அறுவைச் சிகிச்சை செய்ய நிதி கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
மனு அளித்த பின்னர் தனலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “எனது குழந்தைக்கு இதயத்தில் மூன்று இடத்தில் துளைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கு அறுவைச் சிகிச்சை செய்ய ரூ.5 லட்சம் 25 ஆயிரம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவ துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் கேட்ட நிலையில், காப்பீடு திட்டம் குழந்தைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறினர். இதனால், உதவி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். எனது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அரசு உதவி செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் எனது குழந்தையை காப்பாற்றி கொடுக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நாதகவுக்கு எதிராக 'புரட்சித் தமிழர்' கட்சி... சொத்துக்களை வாரி குவித்ததாக சீமான் மீது குற்றசாட்டு.. மாஜி நிர்வாகி ஆதங்கம்!