புதுக்கோட்டை: வயலோகம் கிராமத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 12 மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஐந்து நாட்களில் அடுத்தடுத்து மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, தற்போது அந்த கிராமத்தில் 20 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் மருத்துவ முகாம் அமைத்து தீவிர மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், குடிநீரின் காரணமாகத்தான் மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்ததை தொடர்ந்து, வழக்கமாக விநியோகம் செய்யப்படும் குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, தண்ணீர் லாரிகள் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது குறித்து உடனடியாக உரிய ஆய்வு மேற்கொண்டு நோய்த்தொற்றை தடுக்கவும், உரிய பரிசோதனை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த நித்தீஸ்வரன் என்ற 7 வயது சிறுவன் கடந்த ஜூன் 8-ம் தேதி மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிறுவன் உயிரிழப்புக்கு பின்பும் கூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இந்நிலையில் தான் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அலட்சியமாக கூறுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு தங்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கவும், இனிமேல் இது போன்ற ஒரு பிரச்னை ஏற்படாமல் இருக்க வேண்டும். அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேதனையை தெரிவிக்கின்றனர்.
மேலும், முதலில் தங்கள் பகுதியில் ஒரு மருத்துவ முகாம் அமைக்க சுகாதாரத்துறை வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, வயலோகம் கிராமத்தின் கீழத்தெரு பகுதியில் 12 மாணவ மாணவிகளுக்கு மஞ்சள் காமாலையின் A வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இரண்டு பேர் மட்டும் தான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். குடிநீரால் தான் இந்த பிரச்னை வந்திருக்கக்கூடும். கடந்த இரண்டு நாட்களாக சுகாதாரத் துறையினர் அந்தப் பகுதி கிராமங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனை மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் தொட்டியில் இருந்து மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்னும் ஒரு வார காலத்திற்கு அந்த பகுதி கிராமங்களில்தான் மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.