சென்னை: திருவொற்றியூர் பகுதியில் உள்ள கிராம தெருவில் விக்டோரியா என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மூன்று அடுக்கு மாடிகள் கொண்ட பள்ளிக் கட்டடத்தில் இன்று (அக்.25) மதியம் மூன்றாவது தளத்தில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதாகவும், இதனால் 35க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது.
மயக்கமடைந்த மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக திருவொற்றியூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், லேசாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர்.
வாயு கசிவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள மாணவி ஒருவர் கூறுகையில், "இரண்டு நாட்களாக தொடர்ந்து இதுபோன்ற வாயுவை சுவாசிக்கும்போது உணர்ந்தோம், இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று மீண்டும் வாயுவை சுவாசித்து மயங்கமடைந்தபோது தண்ணீர் குடிக்க அறிவுறுத்தினர். ஆனாலும் தொடர்ந்து மயங்கியதால் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்," எனக் கூறினார்.
அதேபோல், பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் தாயார் கூறுகையில், "எனது மகள் மயக்கமடைந்திருப்பதாகத் தாமதமாகத் தகவல் தெரிவித்தனர். பள்ளிக்குச் சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லை, மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாகக் கூறியதை தொடர்ந்து இங்கு வந்து பார்த்தேன். பள்ளியில் தேவையான ஏற்பாடுகள் செய்யவில்லை, நடந்ததை பள்ளி நிர்வாகம் முறையாக விளக்க வேண்டும்" என மருத்துவமனை வளாகத்தில் இருந்தவாறு கூறினார்.
மற்றொரு மாணவியின் தந்தை கூறுகையில், என்னுடைய இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் அந்த பள்ளியில் படிக்கின்றனர். மகள், மதியம் 12 மணிக்கு மயக்கமடைந்ததாக வகுப்பாசிரியர் எனக்குக் கூறினார். ஆனால், அதில் அக்கறை செலுத்தாமல் என் மகளிடம் நீ நடிக்காதே என ஆசிரியர் கூறியதாக சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம், கே.பி.சங்கர் ஆகியோர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
ரசாயன வாயு கசிவால் பாதிக்கப்பட்ட விக்டோரியா பள்ளியைச் சேர்ந்த இரு மாணவிகள் உயர் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் அந்த இரு மாணவிகளுக்கும் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், நுரையீரல் செயல்பாடு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்தும் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிது நேரம் மாணவர்கள் அச்சத்தில் இருந்ததால் சுவாசிப்பதில் பிரச்னை இருந்ததாகவும், அதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஒருநாள் மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்
பள்ளிக்கு நாளை விடுமுறை: சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்ட விக்டரி மேல்நிலைப் பள்ளிக்கு நாளை விடுமுறை என்று பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, வாயு கசிவு ஏற்பட்ட பல்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படையில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமாண்டே ஏ.கே.செளகான், வாயு கசிவு இருந்ததாக கூறப்படும் இடத்தில் தற்போது எந்த வகையான வாயு வாசனையும் இல்லை. என்ன மாதிரியான வாயு கசிவு ஏற்பட்டது, எதனால் மாணவர்கள் மயங்கி விழுந்தனர் என்பது தெரியவில்லை, தொடர்ந்து ஆய்வு செய்யப்படும்" என்று கூறினார்.
மேலும், வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில் மாநகராட்சி அதிகாரிகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.