கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பகுதிகளில் வடமாநில குழந்தை கடத்தும் கும்பல் சுற்றித் திரிவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் தகவல்கள் பரவியது. இதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்ததோடு, இதுபோன்ற வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3 வடமாநில இளைஞர்கள் சுற்றித்திரிந்துள்ளனர். அப்போது செம்படமுத்தூரில் இருந்து எண்ணேகொள் நோக்கி சென்ற பெண்ணிடம் இருந்து குழந்தையை பறிக்க முயன்றதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் 3 இளைஞர்களை கடுமையாக தாக்கினர். அவர்கள் வந்த ஆட்டோவையும் அடித்து உடைத்தனர். இளைஞர்கள் தாக்கும் காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவியது.
இதனால் பெத்தாளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாதேப்பட்டி சாலை அருகே சென்ற ஒரு வடமாநில இளைஞர், துறிஞ்சிப்ட்டி அருகே நடந்து சென்ற வடமாநில இளைஞரையும் பொதுமக்கள் குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து தாக்கினர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் படுகாயம் அடைந்த இளைஞர்களை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதே போல், குழந்தையை வடமாநில இளைஞர் கடத்துவதை தடுத்தபோது தன்னை தாக்கியதாக கூறி, அக்குழந்தையின் தாய் சவுமதி(25) என்பவரும் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணையில், கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் சுற்றித்திரிந்த 5 பேரும் அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த கமல் ஹூசைன்(30), நிசாம் அலி(26), முகம்மது மெசுதீன்(30), ஆஷ் முகமது(27) சோகித் அலி என தெரியவந்தது.
இவர்கள் 5 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரத்தில் தங்கி, ஆட்டோவில் சென்று குப்பை, மது பாட்டில்களை சேகரித்து அதில் வருமானம் மூலம் பிழைப்பு நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து குழந்தையை கடத்த வந்ததாக கூறி வடமாநிலத்தை சேர்ந்தவர்களை தாக்கிய 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் 8 பேரை கைது செய்து மீதமுள்ள நபர்களை தேடி வருகின்றனர்.
வதந்திகளை நம்ப வேண்டாம்: முன்னதாக இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கூறுகையில் "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தியதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. குழந்தை கடத்தப்படுவதாகக் கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது. அதனைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம், அப்படி யார் மீதாவது சந்தேகம் இருந்தால், காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நேரிடும். அதேபோல், தேவையின்றி வட மாநிலத் தொழிலாளர்கள், தங்களது பணியிடத்தை விட்டு வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் உள்ள கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்தில் பரபரப்பு!