சென்னை: தமுமுக தலைவர் எம்.ஹச்.ஜவாஹிருல்லா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இரண்டாவது விடுதலைப் போராட்டம் என்று சொன்னால் மிகையாகாது. இந்த தேர்தலில் மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை காக்க வேண்டும், அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி இந்தியா கூட்டணி நாடு முழுவதும் பரப்புரை செய்தது.
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இந்தியா கூட்டணி மிக சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40/40 என வெற்றி பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணியின் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள பிடிபி தலைவர் மெகபூபா முப்தி தவிர பெரும்பாலான கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த தேர்தலில், மத்தியில் ஆட்சியை அமைப்பதற்கான இடங்கள் இந்தியா கூட்டணிக்கு கிடைக்கவில்லை. ஆனால் மோடி, அமித் ஷாவின் அராஜகம், சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் தெளிவாக வாக்களித்துள்ளனர். தாமாகவே ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையை பாஜகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலின் தீர்ப்பு மோடி அமித்ஷாவின் அராஜகம், ஊழல்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு. அதே நேரத்தில் இந்தியா கூட்டணி தகுந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
எனவே மோடி மீண்டும் மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்தாலும் சரி; ஆட்சி நீடித்து நிலைக்காது என்பது மட்டுமல்ல, முன்பு போல அவர்கள் சர்வாதிகார முறையில் ஆட்சி செய்ய முடியாது” என்று ஜவாஹிருல்லா கூறினார்.
இதையும் படிங்க: ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; கேசவ விநாயகத்திடம் அனுமதியின்றி விசாரணை நடத்த தடை! - Kesava Vinayagam