சென்னை: திருவான்மியூர் பகுதியில் ஆண்ட்ரோ மதிவாணன்(திமுக எம்.ஏல்.மகன்) மற்றும் அவரது மனைவி மெர்லினா வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் பணி புரிந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது சிறுமியை அடித்துக் கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்யப்பட்டதாக அவர்கள் வீட்டில் பணிபுரிந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மருத்துவமனை மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நீலாங்கரை மகளிர் போலீசார் ஆன்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டுதல், அடித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கணவன் மற்றும் மனைவி இருவருமே தலைமறைவாகியுள்ளதால். அவர்களைப் பிடிக்க ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது. அதில் ரத்தம் சொட்டச் சொட்ட அடித்துக் கொடுமைப்படுத்தியதாகவும் கீழே தள்ளிவிட்டுப் பிறப்பு உறுப்பில் எட்டி உதைத்தவர்களாகவும் அந்த சிறுமி வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் செல்போன் எண்களை வைத்து ட்ராக் செய்ததில் பெங்களூரு தப்பிச் சென்றிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று தனிப்படை போலீசார் நேற்று பெங்களூர் விரைந்தனர்.
ஆனால், தனிப்படை போலீசார் பெங்களூர் வருவதை அறிந்த ஆன்ட்ரோ மற்றும் மெர்லினா தம்பதியினர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனால் பெங்களூரில் உள்ள மெர்லினாவின் உறவினர்கள் இல்லத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், மெர்லினா உறவினர்கள் அவர்கள் இங்கு வரவில்லை என போலீசாரிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மெர்லினாவின் தாய் தந்தையிடம் உதவி ஆணைய தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கணவன் மனைவி இருவரின் செல்போன் எண்களை வைத்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூருக்குச் சென்று தேடுதல் வேட்டையைத் துவங்கியுள்ள போலீசார் தென் மாவட்டங்களுக்கும் சென்று இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து விரைவில் எம்எல்ஏ-வின் மகன் மருமகள் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மாநில மகளிர் ஆணையம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி தலைமையிலான குழுவினர் மதுரைக்குச் சென்று நேரடியாக விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: பணிப்பெண் கொடுமை; தம்பதி மீது வழக்குப் பதிவு.. திருமாவளவன் கடும் கண்டனம் - பல்லாவரம் எம்எல்ஏ ரியாக்ஷன் என்ன?