சென்னை: 28 எதிர்கட்சிகள் ’I.N.D.I.A கூட்டணி என்ற பெயரில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், இந்தியா கூட்டணி சார்பில் நாளை டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏழாம் கட்ட தேர்தல் நாளை (ஜூன் 1) 57 தொகுதிகளில் நடத்தப்பட இருக்கிறது. இதனையடுத்து, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் 543 இடங்களில் 277 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.
இவற்றில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்போம் எனவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, உத்தவ் தாக்ரேயின் சிவசேனா உள்ளிட்ட 28 எதிர்கட்சிகள் இந்த இடம் பெற்று இருக்கிறது.
கூட்டணி கட்சிகளின் மாநிலங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தது. அந்த வகையில், இந்தியா கூட்டணியின் தேர்தலுக்கு முன் இறுதி ஆலோசனைக் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது.
ஆனால், திடீரென ஸ்டாலின் பங்கேற்பு இல்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. நாளை டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்பார் என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆபாச வீடியோ வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்- நீதிமன்றம்!