சென்னை: சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை முதலமைச்சர் அளித்துள்ளார். அந்த மைதானத்தை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணியை இரண்டு வாரங்கள் முன்பாக கோவை சென்றபோது தொடங்கியுள்ளோம். இந்தாண்டில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2024 - 2025ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து, சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (வியாழக்கிழமை) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “விளையாட்டு கட்டமைப்புகளை பரவலாக்கம் செய்கின்ற வகையில், விளையாட்டு அரங்கங்கள் இல்லாத சட்டமன்றத் தொகுதிகளில் தலா ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தோம். முதற்கட்டமாக, 9 சட்டமன்றத் தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. அவை அனைத்தும் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அவர்களுடைய தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படுமா என்று வெட்டுத் தீர்மானங்கள் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கான பதிலை இங்கே அளிக்க விரும்புகின்றேன். மினி ஸ்டேடியம் அமைக்கப்படாத சட்டமன்றத் தொகுதிகளில், மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று ஆய்வு செய்து, அரசின் அனுமதியைப் பெற்று அதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
மேலும், சேலம் மேற்கு தொகுதியிலுள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் (multi-purpose sports stadium) அமைக்கும் பணிகள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திற்குள் ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் சாத்தியமற்றது.. அண்ணாமலை கூறும் காரணம் என்ன? - Annamalai comment Hosur airport