சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக, தற்போது நீலகிரி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில், பாதுகாப்புடன் கூடிய சீரான மின்சாரம் வழங்குவது குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் ஆகியோர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர், "நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம், சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கனமழையின் காரணமாக ஒரு சில இடங்களில் ஏதேனும் மின் தடங்கல் ஏற்பட்டாலும் கூட, அதற்கான காரணங்களை உடனடியாக கண்டறிந்து
அவற்றை உடனுக்குடன் சரி செய்து, பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, சீரான மின் விநியோகம் வழங்கிடவும், மின் தடங்கல் ஏற்பட்டால் முதற்கட்டமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்க வேண்டும்" என அறிவுத்தினார்.
நீலகிரி மாவட்டத்திற்கான அறிவுரை: நீலகிரி மாவட்டத்தில், கனமழையின் காரணமாக இதுவரை பாதிப்படைந்த 230 உயரழுத்த மின் கம்பங்களில், 200 மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன, 466 தாழ்வழுத்த மின் கம்பங்களில், 302 மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. பாதிப்படைந்த 25 மின் மாற்றிகளில், 16 மின் மாற்றிகளில் சரி செய்யப்பட்டும், மீதமுள்ள 9 மின் மாற்றிகளுக்கு பின்னூட்டம் (Back Feeding) வழியாக சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
பாதிப்படைந்த பகுதிகளில் மின்சாரம் சீரமைக்கும் பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உள்ளடங்கிய 250 பேர் கொண்ட குழு தற்போது களத்தில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள தேவையான மின்கம்பங்கள், மின்கம்பிகள் மற்றும் மின்மாற்றிகள் உட்பட அனைத்து தளவாட பொருட்களும் கையிருப்பில் உள்ளது.
கொடைகாணல் பகுதிக்கான அறிவுரை:அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிக்குட்பட்ட வடகவுஞ்சி, மேல்பள்ளம் மற்றும் சவரிக்காடு ஆகிய இடங்களில் கன மழையின் காரணமாக சேதமடைந்த மின் கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்தும் விரைவாக சரி செய்யப்பட்டு இப்பகுதிகளுக்கு தற்போது சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மின் பகிர்மானவட்டங்களின் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்க இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மாநிலம் முழுவதுமான மேம்பாட்டு பணிகள்: தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்காக, கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஒருங்கிணைந்த பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அவற்றுள், இன்றைய நிலவரப்படி, 8 ஆயிரத்து 813 பழுதடைந்த மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன. சாய்ந்த நிலையில் இருந்த 8 ஆயிரத்து 40 மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டு இருக்கின்றன.
புதியதாக 3 ஆயிரத்து 905 மின் கம்பங்கள் இடைசெருகல் செய்யப்பட்டிருக்கின்றன. 45 ஆயிரத்து 525 இடங்களில் பலவீனமான இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. 10 ஆயிரத்து 605 இடங்களில் மின்கம்ப தாங்கு கம்பிகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர்த்து சுமார் 182 கி.மீ பழைய மின்கம்பிகள் புதியதாக மாற்றப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள பராமரிப்பு பணிகளை ஒரு மாத காலத்திற்குள் விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 24X7 மணி நேரமும்செயல்படும் மின் நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தின் 94987 94987 என்ற செல்போன் எண்ணின் மூலமாகவும் மற்றும் சம்பந்தப்பட்ட மின்பகிர்மான வட்டங்களின் மின்தடை நீக்கம் மையம் வழியாகவும் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கப்பலூர் சுங்கச்சாவடி; உள்ளூர் மக்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர் மூர்த்தி!